பாவலரேறு பெருஞ்சித்திரனார்-தமிழ்த்தேசியத்தந்தை

 



பாவலரேறு பெருஞ்சித்திரனார்- இன்று இவரின் நினைவு தினம் 11/06/2020


பாவலரேறு எனவும், பெருஞ்சித்திரனார் எனவும் தமிழ் உணர்வாளர்களால் போற்றி மதிக்கப்படும் பெருஞ்சித்திரனார் 10-03-1933 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் துரைசாமியார், குஞ்சம்மாள் ஆவர். இவர்களுக்குச் சொந்த ஊர் சேலம் மாவட்டம்சமுத்திரம் என்பதாகும். பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் இராசமாணிக்கம் என்பதாகும். பெருஞ்சித்திரனார் தம் தந்தையார் பெயரின் முன்னொட்டை இணைத்து துரை-மாணிக்கம் எனத் தொடக்க காலத்தில் வைத்துக் கொண்டார்.


தமிழ்த் தேசியத் தந்தை என்று அழைக்கப்படும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் (மார்ச் 10, 1933 – சூன் 11, 1995) இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர்.


தமிழரசன் உள்ளிட்ட தமிழ்த்தேசியப் போராளிகளுக்கு ஆதி காரணமாய் நின்றவரும் இவர்தாம். 20 முறை சிறை சென்றும், இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் தமிழீழப் போராட்டம் வரை இவரது செயல்பாடுகள் தமிழர்கள் நடுவில் வியந்து போற்றப்படுகின்றன.


அனைத்துத் தமிழர்களாலும் இன்று தமிழ்த்தேசியத்தந்தை என்று போற்றப்படுகிறார்.


 இவர் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். எனவே, தாம் இயற்றிய இரு காவியங்களையும் எடுத்துக்கொண்டு பாவேந்தரை சந்திக்க சென்றார். ஆனால் பாவேந்தரை சந்திக்க முடியவில்லை. பிறகு ஒரு நூலை கொய்யாக்கனி எனும் பெயரில் அவரே தன் அச்சகத்தில் அச்சிட்டு தந்ததையும் பெருஞ்சித்திரனார் குறிப்பிட்டுள்ளார்.


பெருஞ்சித்திரனார் சாதியை வெறுக்கும் தமிழறிஞராக இறுதிவரை வாழ்ந்தார். அவரது சாதி எதிர்ப்புக் கருத்தியல் தமிழர்களின் ஒற்றுமையை வலியுறுத்துவதாகவும் எளிய, அடித்தட்டு சாதியினரின்பால் மிகுந்த கரிசனம் கொண்டதாகவும் விளங்கியது. எம்மதங்களைத் தழுவினாலும் தமிழர் இனத்தால் தமிழரே என்பதை இவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். சாதியை வைத்துத் தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்தும் போக்கை இவர் தொடர்ந்து கண்டித்து எழுதி வந்தார்.


உலகத் தமிழ்க் கழகம் என்னும் அமைப்பு தேவநேயப் பாவாணர் தலைமையில் திருச்சிராப்பள்ளியில் 1968 சூன் 11 இல் அமைக்கப்பட்டது. பெருஞ்சித்திரனார் பொதுச் செயலாளராக விளங்கினார். தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களிலும் பிற மாநிலங்களிலும் கிளைகள் தொடங்கப்பட்டன.


மொழி, இனம், நாட்டு உணர்வுடன் பாடல்கள் புனைந்து, இதழ்கள் நடத்தி, மேடைதோறும் தமிழ் முழக்கம் செய்து, இயக்கம் கட்டமைத்து உண்மையாக தமிழுக்கு வாழ்ந்த பெருஞ்சித்திரனார் 1995ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி மறைந்தார்.


மோகனா செல்வராஜ்