ஆயுத பூஜை.. சரஸ்வதி பூஜை.. வழிபடும் முறை.. பூஜை செய்ய உகந்த நேரம்...!!!!

 


    ஆயுத பூஜை.. சரஸ்வதி பூஜை.. வழிபடும் முறை.. பூஜை செய்ய உகந்த நேரம்...!!!!


ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை


பூஜை செய்ய உகந்த நேரம்


காலை 09.00 AM முதல் 10.30 AM வரை


பிற்பகல் 01.00 PM முதல் 01.30 PM வரை


மாலை 04.30  pm முதல் 07.00 pm வரை

ஆயுத பூஜை..!!


அன்னை துர்க்கை போருக்காக தன் ஆயுதங்களைப் பூஜித்ததை கொண்டாடும் விதமாகவும், பொதுமக்கள் தன் தொழிலுக்கான மூல ஆயுதமாக இருக்கும் பொருட்களை பூஜிக்கும் நாளாகவும் நவமி திதியில் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சரஸ்வதி பூஜை என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது.


ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்துவதற்கு தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.


 வருடம் முழுவதும் நமக்காக, நம் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், வாகனங்கள், பொருட்களுக்கு நாம் நன்றி சொல்வது இந்நாளின் நோக்கமாகும்.


வழிபடும் முறை :


அன்றைய நாள் வீடு, கடைகளை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் கடவுளின் இருப்பிடமாகும்.


அன்றைய நாள் வாகனங்களையும் சுத்தம் செய்தல் அவசியம்.



    தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை சுத்தம் செய்தல் வேண்டும்.


சுத்தம் செய்த பின் தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களை கடவுளாக எண்ணி பூஜை செய்ய வேண்டும்.


பூஜையின்போது பொரி, பழங்கள், பேரீச்சம்பழம் போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபடுவது சிறப்பு.


ஆயுத பூஜையின் சிறப்பு :


செய்யும் தொழிலே தெய்வம். நாம் செய்யும் தொழிலுக்கு உதவிகரமாக இருக்கும் ஆயுதங்களை கடவுளாக போற்றி வணங்குவது ஆயுத பூஜையின் நோக்கமாகும். ஆயுத பூஜையன்று, ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு மட்டுமே ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று உறுதி கொள்ள வேண்டும்.



சரஸ்வதி பூஜை..!!

கல்வி அறிவை தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி தேவி. கலைவாணியான சரஸ்வதி தேவியை பிரதானமாகக் கருதி, ஆராதனை செய்து வணங்கும் நாள் தான் சரஸ்வதி பூஜை.


வழிபடும் முறை :


ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், சந்தனத்தில் செய்த முகம் வைக்க வேண்டும்.


படத்திற்கு அருகம்புல், மலர்மாலைகள் அணிவிக்க வேண்டும்.


மேஜையின் மேல் புத்தகங்களை அடுக்கி, படத்தின் முன் இலை விரித்து, வெற்றிலை பாக்கு, பழம், பொரி, சுண்டல், சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றைப் படைக்க வேண்டும்.


அதன் பிறகு சரஸ்வதி தேவிக்கு நெய்தீபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.


சிறு குழந்தைகளுக்கு பிரசாதம், கல்வி உபகரணங்கள் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.


மறுநாள், காலையில் புதிதாக இலைபோட்டு வெற்றிலை பாக்கு, பழம், பொரி படைத்து பூஜை செய்த பின் சரஸ்வதி படத்தை எடுத்து விட வேண்டும்.


மஞ்சள் அல்லது சந்தனத்தில் முகம் வைத்திருந்தால் அதை நீர்நிலையில் கரைத்து செடிகளுக்கு ஊற்றலாம்.


சரஸ்வதி பூஜையின் சிறப்பு :


நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க இயலாதவர்கள் சரஸ்வதி பூஜையன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினால் அம்பிகையின் அருள் பூரணமாய் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்நாள் கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும்  திருநாளாகும்


🙏🙏🙏


மோகனா செல்வராஜ்