வருகிறது மகாளய அமாவாசை🌑 முன்னோர்களை வழிபட தயாராகுங்கள்🙏

 


       வருகிறது மகாளய அமாவாசை🌑 முன்னோர்களை வழிபட தயாராகுங்கள்🙏


முன்னோரை ஆராதிப்பதற்கு ஏற்ற மகாளய அமாவாசை!


🌑திதிகளில் மிகவும் சிறப்பு பெற்றது, மகத்துவங்கள் கொண்டது அமாவாசை திதி. எல்லா மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பானதாக இருந்தாலும், புரட்டாசி மாதம் வரும் அமாவாசையை 'மகாளய அமாவாசை" என்று சிறப்பித்து கூறுவார்கள்.


🌑இந்த ஆண்டு மகாளய அமாவாசை வரும் அக்டோபர் 05ஆம் தேதி செவ்வாய்க் கிழமை இரவு 07.05 மணிக்கு ஆரம்பித்து அடுத்த நாள் புதன் கிழமை மாலை 03.56 மணிக்கு முடிகிறது.


🌑சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மகாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மகாளய அமாவாசையின் தனி சிறப்பாக திகழ்கிறது.


🌑மகாளய அமாவாசை நாளில் நம் முன்னோர்களை நினைத்து நாம் செய்கிற பூஜை, வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை ஏற்றுக்கொள்வதற்காக அவர்கள் பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகமும், நம்பிக்கையும் உள்ளது.


🌑நம்மை பெற்று, வளர்த்து ஆளாக்கி மறைந்த தாய், தந்தையரையும் முன்னோர்களையும் நினைத்து, அவர்கள் செய்த நல்ல காரியங்களையும் நம்மை ஆளாக்குவதற்கு அவர்கள் பட்ட சிரமங்களையும் ஒவ்வொரு அமாவாசையிலும் நினைவுகூர்ந்து தர்ப்பண சடங்குகளை நிறைவேற்றுவது மிகவும் புண்ணிய காரியமாக சொல்லப்படுகிறது.


🌑மூதாதையரை நினைத்து காகத்திற்கு வீட்டின் தென்மேற்கு பாகத்தில் அல்லது தென்கிழக்கு பாகத்தில் சாதம் வைத்து வழிபட்டால் மிகுந்த நன்மைகள் கிடைக்கும்.


பிதுர் தேவதைகள் :


🌑நாம் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்யும் போது ஐந்து பிதுர் தேவதைகளை வரவேற்கின்றோம்.


1. நம் பித்ருக்கள் (மண்)

2. புரூரவர் (நீர்)

3. விசுவதேவர் (நெருப்பு)

4. அஸீருத்வர் (காற்று)

5. ஆதித்யர் (ஆகாயம்)


🌑என பஞ்சபூத அம்சமாக ஐவரும் ஒரு சேர பூமிக்கு வருவது மகாளய பட்சத்தில் தான் என கருட புராணம் விளக்கமாக கூறுகின்றது.


🌑சாதாரண அமாவாசையிலும், நினைவு நாட்களிலும் நாம் தரும் திதி சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் தருவது. ஆனால் மகாளய பட்சத்தின் வழிபாடும், மகாளய அமாவாசை அன்று நாம் செய்யும் பூஜையும் நம்மீது அக்கறை கொண்டு நமக்கு உதவிய அனைத்து ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடைய செய்கிறது. எனவே, அத்தனை பித்ருக்களும் ஆசி வழங்குவது இந்த மகாளய பட்ச விரத நாட்களில் தான்.


🌑இவர்கள் 'காருண்ய பித்ருக்கள்" என்று அழைக்கப்படுகின்றார்கள். எனவே மறைந்த நண்பர்கள், தாய்வழி, தந்தைவழி உறவினர்கள் சித்தப்பா, பெரியப்பா முதல் தங்கள் குடும்பத்திற்கு உதவிய அத்தனை ஆன்மாக்களுக்கும் என வேண்டி மகாளய அமாவாசை நாளில் முதியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் வஸ்திர தானம் செய்து உணவளித்து செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து உதவலாம்.


🌑மகாளய அமாவாசை தினத்தன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால், அது ஆயிரம் மடங்கு புண்ணிய பலன்களை தரவல்லது. புண்ணிய மாதமான இந்த புரட்டாசி மகாளய அமாவாசை தினத்தில் முன்னோரை நினைவுகூர்ந்து அவர்களது பரிபூரண ஆசிகளை பெறுவோமாக.


 

பக்தியுடன்


மோகனா செல்வராஜ்