அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர்

 


அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பாவின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைந்தது. 

இதையடுத்து, அண்ணா பல்கலைக் கழகத்தை நிர்வகிக்க உயர்கல்வித் துறை செயலாளர் அபூர்வா தலைமையில் பதிவாளர் கருணாமூர்த்தி, பேராசிரியர் ரஞ்சனி பார்த்தசாரதி ஆகியோர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது.

அதேசமயம், புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் தலைமையில் 3 பேர் கொண்ட தேடல் குழு அமைக்கப்பட்டது.

இதனிடையே, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு நாடு முழுவதும் இருந்து 160 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தவர்களில், தகுதி வாய்ந்த 10 பேரை தேடல் குழு தேர்வு செய்துள்ளது. 

இவர்களுக்கான நேர்காணலும் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் ஆர்.வேல்ராஜை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார். 

துணைவேந்தராக வேல்ராஜ், 3 ஆண்டுகள் பதவி வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவத்தை கொண்டிருக்கும் வேல்ராஜ், அண்ணா பல்கலைக்கழகத்தின் Institute of Energy Studies துறையின் பேராசியராக பணியாற்றி வந்தார். 

கல்வி வாரிய உறுப்பினர், கல்வி கவுன்சில் உறுப்பினர் என அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்வேறு பொறுப்புகளிலும் அவர் இருந்துள்ளார். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் பிஎச்டிக்கான மூன்று படிப்புகளை வகுத்துள்ளார். 

முதுகலை இன்ஜினியரிங் படிப்பிற்கு ஒன்பது புதிய பாடங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.