திமுக ஆட்சி அமைந்த பிறகும் எந்தச் சூழலிலும் நச்சு ஆலை ஸ்டெர்லைட் திறக்கப்படாது – முக ஸ்டாலின்

 


ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கலாம் என்ற முடிவு தற்காலிகமானதுதான் என்று முக ஸ்டாலின் நிலைப்பாடு.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தற்காலிகமாக 4 மாதங்களுக்கு ஆக்சிஜன் மட்டும் தயாரிக்க அனுமதி வழங்கி, முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து, முக ஸ்டாலின் திமுகவின் நிலைப்பாட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம், அதற்கான மின்சாரத்தை வழங்கலாம் என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது என்றும் இந்த முடிவு தற்காலிகமானதுதான் எனவும்  கூறியுள்ளார்.

அதுவும் ஆக்சிஜன் தயாரிக்க மட்டுமே இந்த அனுமதி, வேறு எந்த நிலையிலும் ஆலையை இயக்கக்கூடாது. 

இதனை கண்காணித்திட மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மக்கள் நலவாழ்வு துறை அதிகாரி ஆகியோர் தலைமையில் ஒரு குழு அமைத்திட வேண்டும்.

மேலும் இந்த குழுவில் தூத்துக்குடி மாவட்ட மக்கள், ஸ்டெர்லைட் போராட்ட குழு மற்றும் சுற்றுசூழல் அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெற்றிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அனுமதியை வைத்து ஆலையை நிரந்தமாக திறக்க அனுமதி கூறக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, தயாரிக்கப்படும் ஆக்சிஜன் தமிழ் மக்களுக்கு தேவைப்படும் அளவிற்கு இலவசமாக வழங்கவேண்டும். 

அதுபோன்று, ஸ்டெர்லைட் ஆலை சொந்த மின்சாரத்தை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்றும் தமிழக அரசு தான் மின்சாரம் வழங்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.