விஷவாயு தாக்கி துப்புரவு பணியாளர்கள் மரணம்: காஞ்சிபுரம் அருகே நேர்ந்த சோகம்


பாதாளச்சாக்கடையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட போது விஷவாயு தாக்கி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ராம்பாக்கம் பகுதியில் வெங்கடேஸ்வரா உணவு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் இருந்து சிப்காட்டில் உள்ள பல கம்பெனிகளுக்கு உணவு பரிமாறப்படுகிறது. இந்த நிலையில், அந்த உணவு நிறுவனத்தில் இருக்கும் பாதாள சாக்கடையை சுத்தப்படுத்த நிறுவனத்தின் உரிமையாளர் 3 துப்புரவு பணியாளர்களை அழைத்திருக்கிறார்.

பாதாளச் சாக்கடையை சுத்தப்படுத்தும் பணியில், அப்பகுதி துப்புரவு பணியாளர்களான முருகன், பாக்யராஜ், ஆறுமுகம் ஆகியோர் ஈடுபட்டனர். 

அப்போது, எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கியதால் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்த்துறை விசாரணை நடத்தி, உடல்களை பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நிறுவனத்தின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் தமிழகத்தில் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. மலக்குழிகளில் மனிதர்களை இறக்கக் கூடாது என்ற விதிகளை மீறி, பல இடங்களில் இச்சம்பவம் தொடருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. 

அவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதியெல்லாம் வெறும் கண் துடைப்பு தான். இத்தகைய அவல நிலை, தமிழகத்தில் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.