திமுக தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை – மு.க.ஸ்டாலின் தகவல்

 



திமுக தேர்தல் அறிக்கையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை சேர்க்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவை தேவராயபுரம் கிராமத்தில் நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

அப்பொழுது அவர் பேசுகையில், ஜெயலலிதா அவர்கள் 1.1 சதவீத வாக்கு வித்தியாசத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சரானவர். 

அவருடைய மரணத்தில் மர்மம் என்று ஓ.பி.எஸ் அவர்கள் அவரது நினைவிடத்திற்குச் சென்று 40 நிமிடம் தியானத்தில் அமர்ந்தார். ஆன்மாவோடு பேசினார். 

அவரது மரணத்தில் மர்மம் இருக்கிறது நீதி கேட்கப் போகிறேன் என்றார். அதன்பிறகு அந்தக் கட்சி இரண்டாக உடைந்தது. இதையெல்லாம் நீங்கள் அறிவீர்கள்.

பின்னர், துணை முதலமைச்சர் பதவி கொடுத்து விடுகிறோம் என்று சொல்லி பிரச்சினையை இதோடு விட்டுவிட வேண்டும் என்றபோது, கண்துடைப்புக்காக ஏதாவது செய்யுங்கள் என்றதால் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 

மூன்று ஆண்டுகளாக விசாரணை ஆணையம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

பல முறை அந்த ஆணையம் நீட்டிக்கப்பட்டுவிட்டது. 

சாட்சி சொல்ல வருமாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை பலமுறை அழைத்தும் அவர் போகவில்லை. 

இதிலிருந்து என்ன தெரிகிறது; அந்த மர்மத்தை மறைக்க முடிவு செய்திருக்கிறார்கள். 

இப்போது விட்டுவிடலாம்; நான்கு மாதங்கள் பொறுத்திருங்கள்; தேர்தல் அறிக்கை எல்லாம் தயாரித்துக் கொண்டிருக்கிறோம். நாம் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யப்போகிறோம் என்பதையெல்லாம் சொல்லவிருக்கிறோம். 

ஆட்சிக்கு வந்தப் பிறகு அவற்றையெல்லாம் செய்யவிருக்கிறோம். தலைவர் கலைஞர் அவர்களைப் பொறுத்தவரை ‘சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்’ என்றார். 

அதில் பல திட்டங்களைச் சொல்லவிருந்தாலும், முக்கியமாகச் சொல்லவிருப்பது அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டுபிடித்து, அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று பேசியுள்ளார்.