கமலா ஹாரிஸ் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி

 மெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

உலகெங்கும் அச்சுறுத்தலை உண்டாக்கி உள்ள கொரொனா பரவல் அமெரிக்காவில் மிகவும் அதிகமாக உள்ளது.  

அங்கு இதுவரை 2.60 கோடி பேர் பாதிக்கப்பட்டு 4.36 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.  தற்போது 98.08 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.  இதையொட்டி இங்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ஆட்சியின் முதல் 100 நாட்களுக்குள் நாளொன்றுக்கு 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கும் என உறுதி அளித்துள்ளார்.  

அமெரிக்காவில் சென்ற மாதம் அவசர பயன்பாட்டுக்காக இரு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் சென்ற வாரம் மட்டும் தினசரி சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோருக்குத் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

வெள்ளை மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் நிர்வாகம் மேலும் 20 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசிகள் வாங்க உள்ளதாகவும் கோடைக்காலத்துக்குள் இது 60 கோடியாக அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வருடக் கோடைக்கால இறுதிக்குள் 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி அன்று முதல்  டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.  

26.01.2021 அவர் தனது இரண்டாம்  டோஸ் கொரொனா தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.  

அவர் இது குறித்து தொலைக்காட்சியில், “அனைவரும் அவரவர் முறை வரும் போது தவறாமல்  கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இதுவே உங்கள் உயிரைக் காக்கும்” என தெரிவித்துள்ளார்.