அமைதி' தலைமைகள்... ஆட்டம் காண்கிறதா அதிமுக - பாஜக கூட்டணி?

 




அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று அந்தக் கட்சி அறிவித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வரை பாஜக தலைமை அறிவிக்கும் எனக் கூறி, அவ்வப்போது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது தமிழக பாஜக. ஆனாலும், தற்போது அதிமுடன் கூட்டணியில் இருப்பதாக அவர்கள் சொல்லத் தவறுவதில்லை.

சில நாட்களுக்கு முன்பு பேசிய தமிழக பாஜகவின் துணைத் தலைவர் அண்ணாமலை, "ஹெச்.ராஜாவை அமைச்சராக்குவோம்" என்றார். அண்மையில் அரியலூரியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், "யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும். முதல்வர் வேட்பாளர் அதிமுக தலைவராக இருப்பினும், அது குறித்தான அறிவிப்பை பாஜக தலைமையே அறிவிக்கும்" எனத் தெரிவித்தார். இவை அனைத்தையும் பார்க்கும்போது அதிமுக - பாஜக இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதே கண்கூடாகத் தெரிகிறது.

இந்த நிலையில்தான் நேற்று அதிமுகவின் தேர்தல் பரப்புரை தொடக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணி கருத்து மோதல் குறித்தோ, தேசிய கட்சிகள் குறித்தோ அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பேசவில்லை என்பது சற்று வியப்பை ஏற்படுத்தியது.