பணியிலிருந்த அதிகாரியை மாற்றி ஓய்வுபெற்ற அதிகாரி நியமனம்: ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

 பணியிலிருந்த அதிகாரியை மாற்றி ஓய்வுபெற்ற அதிகாரி நியமனம்: சென்னை மாநகராட்சி உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்


சென்னை மாநகராட்சியில் பணி ஓய்வுப்பெற்ற அதிகாரிக்கு பணி நீட்டிப்பு கொடுத்து பணியிலுள்ளவரை மாற்றி நியமித்த ஆணையரின் உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்து. மீண்டும் பழைய அதிகாரியை நியமிக்க உத்தரவிட்டது.

சென்னை மாநகராட்சியின், முதன்மை தலைமை பொறியாளராக இருந்தவர் புகழேந்தி. இவரது பணிக்காலம் முடிந்த நிலையில், இரண்டாண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. பின் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமை பொறியாளராக, புகழேந்தி நியமிக்கப்பட்டார்.

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமை பொறியாளராக இருந்த நடராசன், சென்னை மாநகராட்சி முதன்மை தலைமை பொறியாளராக மாற்றப்பட்டுள்ளார். இதை எதிர்த்து நடராசன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், நகராட்சி நிர்வாகத் துறையின் தலைமைப் பொறியாளராக புகழேந்தி நியமனம் செய்ததை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.


அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சட்டவிரோத பணி நீடிப்பு வழங்க முடியாது என்றும், அவருக்கு தகுதி கிடையாது என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். முக்கிய தலைமை பதவியில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கும்போது, தகுதியானவர்கள் இல்லாதபோது நியமிக்கலாம். ஆனால் புகழேந்தி நியமனம் அசாதாரண சலுகையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மனுதாரர் நடராசனுக்கு மீண்டும் நகராட்சி நிர்வாகத் துறையின் தலைமைப் பொறியாளர் பணியை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.