கொரோனாவுக்கு பின் தமிழகத்தில் நடக்கும் முதல் தேர்த் திருவிழா

 


சுசீந்திரம் மார்கழித் தேரோட்டம்: கொரோனாவுக்கு பின் தமிழகத்தில் நடக்கும் முதல் தேர்த் திருவிழா

கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த 260 நாள்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது சில தளர்வுகள் இருந்தாலும் பல கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. ஊரடங்குக் காரணமாக மூடப்பட்டிருந்த கோயில்கள் இப்போது திறக்கப்பட்டுள்ளன. 

ஆனாலும் கோயில்களில் மக்கள் திரளாகக் கூடும் திருவிழாக்கள், அன்னதானம், தேரோட்டம் உள்ளிட்டவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கடந்த சுமார் எட்டு மாதத்திற்கும் மேலாக எந்த கோயில்களிலும் தேரோட்டம் நடைபெறவில்லை.

இந்த நிலையில் சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் மார்கழி பெரும் திருவிழாவில் தேரோட்டம் நடத்தக் குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அனுமதி அளித்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில் மிகவும் பழைமையானது. சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் ஒன்றாகக் காட்சி தருவதால் இந்தக் கோயில் மூலவருக்குத் தாணுமாலைய சுவாமி எனப் பெயர் வந்தது. 

இங்கு மார்கழி மற்றும் சித்திரை மாதங்களில் பெரும் திருவிழா நடப்பது வழக்கம்.

இந்த நிலையில் சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் மார்கழிப் பெருந் திருவிழாவை முழுவதுமாக நடத்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

அதே சமயம், சுவாமி வாகனங்கள் வரும்போது நடக்கும் அர்ச்சனை மற்றும் அன்னதானம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 200 பேருக்குமேல் ஒரே நேரத்தில் கூடி நிற்கக்கூடாது, தெருக்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதே நேரம் கலை நிகழ்ச்சிகள், வாகன பவனி, தேர்பவனி ஆகியவை எந்தக் குறையும் இல்லாமல் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி திருக்கோவில் தேரோட்டம்

 சுசீந்திரம் கோயிலில் இம்மாதம் 21-ம் தேதி (டிச.21) கொடியேற்றத்துடன் மார்கழிப் பெரும் திருவிழா தொடங்குகிறது. டிசம்பர் 30-ம் தேதி வரை 10 நாள்கள் திருவிழா நடக்கிறது. 9-ம் நாள், அதாவது டிசம்பர் 29-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

மார்கழி பெரும்திருவிழா ஏற்பாடுகள் கன்னியாகுமரி மாவட்டத் திருக்கோயில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் நடந்து வருகின்றன.