கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்தவர்களை பணிநீக்கம் செய்வதா? சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்

 


 தாராபுரம் நகராட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட  தூய்மைப் பணியாளர்களை உடனடியாக பணி யில் அமர்த்த வலியுறுத்தி சிஐடியு சங்கத்தினர் கண்டன  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சியில் கடந்த 6  ஆண்டுகளாக தற்காலிக தூய்மைப் பணியாளர்களாக ஒப்பந்த அடிப்படையில் 200க்கும் மேற்பட்டோர் பணி யாற்றி வந்தனர். 

இவர்கள் கொரோனா கால கட்டத்தில்  நோய்ப் பரவலை கட்டுப்படுத்த சிறப்பாக பணிபுரிந்த வந்தனர். 

இந்நிலையில், தாராபுரம் நகராட்சியில் ஒப்பந்த  அடிப்படையில் பணிபுரிந்து வந்த 40 தொழிலாளர்கள் கடந்த 1 ஆம் தேதி முதல் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

இதன் காரணமாக தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளது.  நகராட்சி நிர்வாகத்தின் இத்தகைய தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு உடனடியாக மீண்டும் பணி வழங்கப் கோரியும் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. 

தாராபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு சிஐடியு  மாவட்ட துணை தலைவர் என்.கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பணிநீக்கம் செய் யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.