அமெரிக்க அதிபர், துணை அதிபராக வெற்றிப் பெற்ற ஜோ பிடன், கமலா ஹாரிசுக்கு தலைவர்கள் வாழ்த்து ஜனவரி மாதம் பதவியேற்பு

 



அமெரிக்க அதிபராகும் தகுதியை பெற்றுள்ள ஜோ பிடனுக்கும், துணை அதிபராகும் கமலா ஹாரீசுக்கும் இந்திய ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அடுத்தாண்டு ஜனவரியில் ஜோ பிடனும், கமலா ஹாரிசும் பதவியேற்க உள்ளனர்


ஜோ பிடன் 290 மக்கள் பிரதிநிதி வாக்காளர்களின் வாக்குகளையும், அதிபர் டிரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளனர். அதனால், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடன் வெற்றி உறுதியானதால், அவர் அமெரிக்காவின் 46வது அதிபராக வரும் 2021 ஜனவரி மாதம் பதவியேற்பார். ஜோ பிடன் வெற்றியுடன், தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ்  (56) துணை அதிபராகப் பதவியேற்பார். அமெரிக்காவின் முதல் பெண் துணை  அதிபர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் துணை அதிபர் என்ற பெருமையை கமலா  ஹாரிஸ் பெறுகிறார்


முதலில் உரையாற்றிய துணை அதிபர் கமலா  ஹாரிஸ், ஜோ பிடனுக்கு புகழாரம் சூட்டி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது ஜோ பிடன் பேசுகையில், ‘அமெரிக்கர்கள்  தங்களது வாக்குகள் மூலம் தெளிவான முடிவை அளித்துள்ளனர்.

 

நான் அதிபராக  தேர்வு செய்யப்பட்டதன் மூலம் அமெரிக்கர்களிடம் புதிய நம்பிக்கை  பிறந்துள்ளது. அனைத்து தரப்பு மக்கள் நலனுக்காகவும் நான் பாடுபடுவேன். அமெரிக்காவின்  முதுகெலும்பாக இருக்கும் நடுத்தர மக்களின் நலனுக்காக பாடுபடுவேன். துணை  அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிஸ் சிறப்பாக செயல்படுவார்.

 

இவர், தெற்காசியாவில்  இருந்து குடிபெயர்ந்து அமெரிக்காவில் உயர் பதவியை அடைந்துள்ளார். எனது குடும்பத்தின் அன்பு, ஆதரவு இல்லாமல் இந்த நிலைக்கு  வந்திருக்கமுடியாது.

 

கொரோனா தொற்று காலத்தில் பெருந்திரளாக வாக்களித்த  மக்களுக்கு நன்றி. கருப்பின மக்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் அரவணைத்து  செல்வோம். 

 

டிரம்ப்புக்கு வாக்களித்தவர்கள் எனக்கு எதிரிகள் அல்ல. அவர்களும்  அமெரிக்கர்கள்தான். 

 

அவர்கள் நலனுக்கும் பாடுபடுவேன். ஒரு அதிபராக ‘ப்ளூ ஸ்டேட்ஸ், ரெட் ஸ்டேட்ஸ்’ என்று பார்க்காமல், ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப்  அமெரிக்கா’ என்றுதான் பார்ப்பேன்.

 

கொரோனா பெருந்தொற்றை ஒழிக்கும் வரை நமது நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க முடியாது என்பதை உணர்ந்திருக்கிறோம். சர்வதேச  அளவில் அமெரிக்காவின் நற்பெயரை உயர்த்துவோம். உலக நாடுகளில் அமைதி நிலவ  பாடுபடுவேன். அமெரிக்காவில் அடுத்து என்ன நடக்கும் என்பதை உலகம் உன்னிப்பாக  கவனித்து வருகிறது’ என்று உரையாற்றினார்.

 

அமெரிக்க அதிபராகும் தகுதியை பெற்றுள்ள ஜோ பைடனுக்கும், துணை அதிபராகும் கமலா ஹாரிசுக்கும், குடியரசுத் தலைவர் ராம்நாத் ேகாவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, ப.சிதம்பரம், திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி: ஜோபிடன், கமலா ஹாரீசுக்கு : இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். வாழ்த்து

 

இதேபோல், உலக தலைவர்களும் ஜோ பிடனுக்கும், கமலா ஹாரிசுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.