தருமபுரம் ஆதீனத்திடம் ஆசிபெற்ற உதயநிதி ஸ்டாலின் முருகன் பாமாலை நூலையும் பெற்றுக்கொண்டார்


உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரப் பயணத்தின் வழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சென்ற உதயநிதி ஸ்டாலின், அங்கு ஆன்மிக நூல் வெளியீட்டில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் ஆதீன கர்த்தர் கொடுத்த திருநீறும் அணிந்து பயபக்தியுடன் வழிபட்டார்.


திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை  (நவ. 20) திருக்குவளையில் தொடங்கினார். அவரது பயணம் திட்டமிட்டபடி நடைபெறாமல் ஒவ்வொரு நாளும் பிரச்சார பயணம் தொடங்கியதும் கைது செய்யப்பட்டு வருகிறார்.


அதன்படி  (நவ. 21) காலை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் கைது செய்யப்பட்ட அவர் (Nov 21) மாலை விடுவிக்கப்பட்டார்.


விடுவிக்கப்பட்ட வேகத்தில் மயிலாடுதுறை நோக்கி வந்த உதயநிதி வழியில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்திற்கு  சென்றார்.


அங்கு அவரை வரவேற்று பொன்னாடையும், சந்தன மாலையும் அணிவித்த குருமகா சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், ஆசி கூறி திருநீறு வழங்கினார். அதனை நெற்றியில் பூசிக் கொண்டார் உதயநிதி.


கந்த சஷ்டி கவசம் அவமதிக்கப்பட்டதாக திமுகவின் மீது சுமத்தப்பட்ட பழிக்கு பதிலடியாகத் தான் இந்நிகழ்வு நடைபெற்றதாக திமுகவினர் சொல்கிறார்கள்.


கந்தன் மீது பாடப்பட்ட கந்த சஷ்டி கவசம், கந்தர் அனுபூதி உள்ளிட்ட பாமாலைகளை தொகுத்து வெளியிடப்பட்ட இந்நூலை உதயநிதி பெற்றுக் கொண்டது தாங்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை என்பதை வெளிக்காட்டும் முயற்சிதான் என்கிறார்கள் திமுகவினர்.