உலகநாயகன் உதித்த நாள்

உலகநாயகன் கமலஹாசனின் 66-வது பிறந்தநாள்.  


திரையுலகில் உலக நாயகனாகவும், அரசியல் வாட்டாரத்தில் மக்களின் தலைவனாகவும் வலம் வருபவர் கமலஹாசன். இவர் இன்று தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.


தற்போது இந்த பதிவில், இவரது வாழ்க்கை பயணத்தை சற்று திரும்பி பார்ப்போம். உலகநாயகன் கமலஹாசன், 1954-ம் ஆண்டு, நவ.7ம் நாள் சீனிவாசன்-ராஜலக்ஷ்மி தம்பதியினருக்கு மகனாய் பிறந்தார்.


இவருக்கு சாருஹாசன், சந்திரஹாசன் என இரண்டு சகோதரர்களும், நளினி என்ற ஒரு சகோதரியும் உள்ளனர். 


கமல் குடும்பத்தைச் சேர்ந்த அவரது அண்ணன் சாருஹாசனும், அவரது மகள் சுஹாசினியும், ஆக மூன்று பேருமே தேசிய விருது பெற்றவர்கள்


கமல்ஹாசன் பற்றிய சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பு


எம்.ஜி.ஆருக்கு ‘நான் ஏன் பிறந்தேன்’ திரைப்படத்திலும், ஜெயலலிதாவுக்கு ‘அன்பு தங்கை’ படத்திலும், சிவாஜிக்கு சவாலே சமாளி படத்திலும் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி இருக்கிறார்.


அப்போது எம்.ஜி.ஆருக்கு, சிவாஜிக்குரிய நடன அசைவுகளை வைத்து இருக்கிறார் ‘குறும்புக்காரா...’ என்று செல்லமாக எம்.ஜி.ஆர். கோபித்துக் கொண்டாராம்.


கமலின் தந்தையின் உடல் தகனத்துக்காக மயானத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. கமலும் அவருக்கு நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே உடனிருக்கிறார்கள்.


இறுதிச் சடங்குகள் ஒவ்வொன்றாக நடக்கின்றன. சாருஹாசன், சந்திரஹாசன், கமலஹாசன் ஆகிய மூவரும் சிதையின் அருகில் நிற்கிறார்கள்.


திரும்பிப் பார்த்த கமல், ‘அண்ணா நீங்களும் வாங்க’ என்று இருவரையும் அழைக்கிறார். அவர்கள், ஆர்.சி.சக்தி, ஸ்டண்ட் மாஸ்டர் கிருபா. அவர்களையும் கொள்ளி வைக்கச் சொல்கிறார் கமல். கதறி துடித்தபடியே அவர்களும் கொள்ளி வைக்கிறார்கள். என் தந்தையை நேசித்த நீங்கள் என்றும் என் சகோதரர்களே’ என்று மவுனமாக கூறினார் கமல்.


கமல் மெட்ராஸ் பாஷை பேசி நடித்த படங்கள் ‘சட்டம் என் கையில்’, ‘அபூர்வ சகோதர்கள்’ ஆகிய இரண்டு படங்களுமே மெகா ஹிட். மெட்ராஸ் பாஷையை பேசும் விதத்தை நடிகர்  லூஸ் மோகனிடம் கேட்டு அறிந்துகொண்டாராம். மெட்ராஸ் பாஷையைப் பேசி நடிப்பதென்றால், இருவருமே திருநெல்வேலி அல்வா சாப்பிடுவது போல் நடிப்பார்கள்


திரையுலகில் கமல்  


இன்று திரையுலகின் நாயகனாக வலம் வரும் கமலஹாசன், திரையுலகில் மிக சிறிய வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 


குழந்தை நட்சத்திரமாக அப்போதைய முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி மற்றும் ஜெமினி கணேஷனுடன் கமல் நடித்துள்ளார்.


 நடிப்பு பற்றி அனைத்து அடிப்படை நுணுக்கங்களையும் கமல் கற்றது அவ்வை டி. சண்முகத்திடம் தான். 


தொடக்கத்தில் சிவாலயா என்ற நடனக் குழுவை நடத்தினார் கமல்


கமல்ஹாசன், தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார்.


கமலஹாசன் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர்.


நினைத்தாலே இனிக்கும் படம்தான் கமலும் ரஜினியும் இணைந்து நடித்த கடைசிப் படம்.


மேலும் பத்மஸ்ரீ, பத்ம பூஷன், செவாலியர் விருது, என்.டி.ஆர்.தேசிய விருது மற்றும் கலைமாமணி விருது என பல விருதுகளை பெற்றுள்ளார்.


சிறந்த மாநில மொழி திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேவர் மகன் திரைப்படத்திற்கு தயாரிப்பாளர் என்ற முறையில் கமல்ஹாசனுக்கு ஒரு இந்திய தேசிய விருது.


ஒரே வருடத்தில் ஐந்து வெள்ளிவிழா படங்களை கொடுத்தவர் கமல்ஹாசன். இந்த சாதனை இதுவரை யாராலும் முறியடிக்கப்படவில்லை. அந்த படங்கள் வாழ்வே மாயம்; மூன்றாம் பிறை; சனம் தேரி கஸம்; சகலகலா வல்லவன்; ஹே தோ கமல் ஹோகயா 


தசாவதாரம் திரைப்படத்தில் பத்து வேடங்களில் நடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் கமல். 


10 தமிழக அரசு திரைப்பட விருதுகள்.


மூன்று முறை, ஆந்திரா அரசின் நடிப்புக்கான நந்தி விருதுகள். (திரைப்படங்கள் - சாகர சங்கமம், சுவாதி முத்யம், இந்திருடு சந்திருடு)


19 பிலிம்பேர் விருதுகள்.


50 வருடம் திரைத்துறையில் பணியாற்றியமைக்காக கேரளா அரசின் சிறப்பு விருது.


தென் இந்திய நடிகர்களிலேயே முதன் முதலாக அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் பெருமையை பெற்றுள்ளார்


இவர் தமிழ் மக்களால் விரும்பி பார்க்கப்படும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின், மூன்று சீசன்களை தொகுத்து வழங்கினார்.


தற்போது நான்காவது சீசனையும் தொகுத்து வழங்குகிறார். இவரது நடிப்பு திறமையால் சினிமா வட்டாரத்தில், பெரிய ரசிகர் பட்டாளத்தை தன்வசப்படுத்தியுள்ளார். 


கமல், டான்ஸ் மாஸ்டராக, பாடகராக, கதாசிரியராக, திரைக்கதை ஆசிரியராக, வசனகர்த்தாவாக, இயக்குநராக, குழந்தை நட்சத்திரமாக, கதாநாயகனாக, வில்லனாக என்று பல அவதாரங்களை திரைப்படத்துறையில் எடுத்தவர்


எழுத்தாளர் சுஜாதா, சந்தானபாரதி, அனந்து, ஆர்.சி.சக்தி, ஆகியோர் கமலுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள். இவர்களிடம் கதை குறித்த விவாதங்கள், நவீன சினிமாவைப் பற்றிய விமர்சனங்களை காரசாரமாக எடுத்து வைப்பார்.


கமல் தனது வீட்டில் மிகப்பெரிய வீடியோ லைப்ரரியை வைத்திருக்கிறார். அதில் உலக சினிமா தொடங்கி உள்ளூர் சினிமா வரை அனைத்து மொழி திரைப்படங்களும் உள்ளன. 


திரைப்படக் குறிப்பு


இவர் 2019 ஆம் ஆண்டுவரை 220 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.


    1960 - தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக‌ அறிமுகம்
    1962 - மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக‌ அறிமுகம்
    1976 - தெலுங்குத் திரைப்படங்களில் அறிமுகம்
    1977 - வங்காளத் திரைப்படங்களில் அறிமுகம்
    1977 - கன்னடத் திரைப்படங்களில் அறிமுகம்
    1981 - இந்தித் திரைப்படங்களில் அறிமுகம்


அரசியலில் கமல்


உள்ளூர் அரசியல் மட்டும் அல்ல, உலக அரசியலை விரல் நுனியில் வைத்திருப்பவர் கமல். 


கமல், தான் அரசியலுக்கு வருவதற்கான நேரம் வந்துவிட்டது என தனது டிவிட்டர் பக்கத்தின் வாயிலாக அறிவித்திருந்தார்.


அதன்படி, பெப்ரவரி 21, 2018 அன்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கமல் தனது கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம் என அறிமைவித்தார்.


அதே கூட்டத்தில் கட்சிக்கான கொடியையும் வெளிட்டு அதனை ஏற்றி வைத்தார். அந்தக் கொடியில் ஆறு கைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பது போலவும் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இருந்தது. கொடியின் நடுவில் கருப்பு வண்ணத்தைப் பின்புலமாகக் கொண்டு நடுவில் வெள்ளை நட்சத்திரம் இருக்கும்.


அதில் மக்கள் நீதி மய்யம் என எழுதியிருக்கும்.


தொடர்ந்து அரசியலில் மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பாதாக நடைபெற்ற கட்சி கூட்டத்தில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்களுடன் கூட்டணி வைத்து போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இன்று தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடும் கமலஹாசனுக்கு, சினிமா வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும்  அனைத்தையும் செய்யும் கமலுக்கு  பிறந்த நாள் வாழ்த்துகள்


சமூக ஊடகங்களில், குறிப்பாக ட்விட்டரில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார் கமல். ட்விட்டரில் 5.7 மில்லியன் ஃபாலோயர்களை வைத்திருக்கிறார் கமல்.


திரையுலகில் முன்மாதிரியாக உடல் தானம் செய்தவர்


இந்திய சினிமாவின் முக்கிய கலைஞனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின்  பயணம் தொடரும்.


மோகனா செல்வராஜ்