தமிழ்நாட்டை மதவெறிக்கு பலி கொடுக்க மாட்டோம் - திருமாவளவன் பேச்சு

  


விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனுதர்ம நூலில் பெண்களை பற்றி கூறியுள்ளதை பொதுமக்களுக்கு விளக்கும் துண்டு பிரசுரம் வினியோகிக்கும் நிகழ்ச்சி ஆவடியை அடுத்த கண்ணபாளையம் பகுதியில் நடந்தது.


இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு அங்குள்ள சிவன் கோவிலில் சிவலிங்கத்துக்கு கற்பூர தீபம் ஏற்றி வழிபாடு செய்தார்.


பின்னர் மனுதர்மம் நூலில் கூறி இருந்தது தொடர்பான தனது பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய சைவ தமிழ் பேரவை இயக்க தலைவி கலையரசி நடராஜனிடம் முதல் துண்டு பிரசுரத்தை வழங்கினார்.


அப்போது திருமாவளவன் பேசியதாவது:-


மனுதர்மம் நூலில் கூறி இருப்பது குறித்து நான் எப்போதோ பேசியது. அது யாருக்கும் தெரியாது. அதை இன்று உலகம் முழுவதும் பரப்பி விட்டார்கள். மனுதர்ம நூலை பற்றி பேசியதற்கு நான் தான் பொறுப்பேற்க முடியும். ஆனால் தி.மு.க. சொல்லித்தான் நான் செய்வதாக சொல்வதும், இதற்கு மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும் என்று கூறுவதையும் ஏற்க முடியாது.


தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது எனவும், கூட்டணியில் உள்ள கட்சிகளை சிதறடிக்கலாம் என்றும் கனவு கண்டால் அது பலிக்காது.


சமூகநீதி பேசுகின்ற இந்த மண்ணில் மதரீதியான அரசியலுக்கு இடமில்லை என்பதை வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் காட்டுவார்கள்.


ஒவ்வொருவரின் உணர்வுகளையும், நம்பிக்கையையும் மதிக்க கூடியவன் நான். ஆகவே சிவலிங்கத்தின் முன் நான் கற்பூர தீபம் காட்டி வழிபட்டேன். தமிழ்நாட்டை நாங்கள் ஒருபோதும் மதவெறிக்கு பலி கொடுக்க மாட்டோம் இவ்வாறு அவர் பேசினார்.


இதில் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆவடி தொகுதி செயலாளர் வக்கீல் ஆதவன், மாநில நிர்வாகிகள் வன்னியரசு, பாலசிங்கம், நீலவானத்து நிலவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.