மருத்துவக் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்"- முதல்வர் அறிவிப்பு

 நீட் தேர்வு காரணமாக ஒவ்வொரு வருடமும் மருத்துவ கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே வந்தது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை பல தரப்பில் இருந்து வைக்கப்பட்டது.


ஆனால் மத்திய அரசு நீட் தேர்வு ரத்து என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேலும் மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. 


கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார். அதன்படி மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றது.


அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களை உடனே கட்டணம் செலுத்த நிர்பந்திக்க கூடாது என தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவக் கல்வி இயக்ககம் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது. 


இந்தநிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், "மாணவர்களின் கல்விக்கட்டணத்தை திமுக (DMK) ஏற்கும்" என அறிவித்துள்ளார். 


அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப்பள்ளி மாணவர்கள் கட்டணம் கண்டு பரிதவிக்கிறார்கள். அவர்களின் மருத்துவக் கனவு அணையாது!


இந்நிலையில், நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில்,  தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை மாணவர் நலன் காக்கும் திமுக ஏற்கும் என்றும் அறிவித்தார்.


திமுகவின் இந்த அறிவிப்பை பலர் பாராட்டி வருகின்றனர்.


பாமக தலைவர் ராமதாஸ் அவர்களும் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்வி கட்டணத்தை தமிழக அரசே ஏற்க வேண்டும் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதனையடுத்து, தமிழக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும். கல்வி கட்டணம், விடுதி கட்டணங்கள் போன்றவற்றை அரசே நேரடியாக கல்லூரி நிர்வாகத்துக்கு செலுத்தும் என தெரிவித்தார்.தற்போது, இதற்கு பா.ம.க.கட்சி நிறுவனர் ராமதாஸ் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட் செய்துள்ளார். அதில், பா.ம.க.வின் யோசனையை ஏற்று, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர இடம் கிடைத்த அரசு பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும் என முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பாமக கோரிக்கை ஏற்கப்பட்டதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.