காமராசர் (காமராஜர்) நினைவு நாள்


காமராசர் (காமராஜர்) (சூலை 15, 1903 - அக்டோபர் 02, 1975) தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவராவார்.


இவர் 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆனார். இவர் ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தார்.


தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர்.


இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ்வர். இவர் "கருப்பு காந்தி" என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார்.


காமராசரின் மறைவுக்கு பின், 1976 இல் இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்றும், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.


முதலமைச்சராக ஆற்றிய பணிகள்


ராசாசி கொண்டு வந்திருந்த குலக்கல்வித் திட்டத்தினைக் கைவிட்டார். அவரது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27,000 ஆனது. 1


920 இல் நீதிக்கட்சி அரசு ஆதரவுடன் சென்னை மாநகராட்சியில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. முதலில் ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த ஒரு மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவுத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.


பின் மேலும் நான்கு பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டமே 1960 களில் காமராசரால் அறிமுகப்படுத்தப்பட்டு எம். ஜி. ராமச்சந்திரனால் 1980 களில் விரிவுபடுத்தப்பட்ட சத்துணவுத் திட்டத்தின் முன்னோடியாகும்.


அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாகப் பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 விழுக்காடாக உயர்ந்தது. (பிரித்தானியர் காலத்தில் இது 7 விழுக்காடாக இருந்தது). பள்ளிகளில் வேலைநாட்கள் 180 இல் இருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கப்பட்டது.


காமராசர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 10 முக்கிய நீர்பாசனத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம்[1], சாத்தனூர், கிருசுணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்குக் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காகக் காமராசரால் கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப் பாலம் ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலமாக இன்றளவும் உள்ளது.


அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்:


    பாரத மிகு மின் நிறுவனம்
    நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
    மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம்(MRL இதன் தற்போதைய பெயர்      CPCL)


    இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF)
    நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
    கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
    மேட்டூர் காகிதத் தொழிற்சாலை


குந்தா மின் திட்டமும், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின் திட்டங்களும் காமராசரால் ஏற்படுத்தப்பட்டவை.


காமராசர் முதல் அமைச்சரான முதல் ஆண்டிலேயே அனைத்துத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்க ஆணையிட்டார். பின்னர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அதன்பின்னர் தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்கும்படி ஓய்வு ஊதியத் திட்டத்தை நீட்டித்தார்.


காமராசர் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தமிழக அளவில் சுருக்கிக் கொண்டார். தமிழக ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி வந்தார். இந்திரா காந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராசரும் ஒருவர்.


இந்தியாவின் அரசியல் போக்குகுறித்து மிகுந்த குறையும் கவலையும் கொண்டிருந்த நிலையில் காமராசர் இருந்தார், இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் மற்றும் பல தலைவர்கள் இக்காலகட்டத்தில் இந்திரா காந்தி அரசால் கைது செய்யப்பட்டிருந்தனர்.


அக்டோபர் இரண்டு காந்தியடிகள் பிறந்த நாளன்று அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தார் காமராசர். ஆனால், அன்று ஆச்சார்ய கிருபளானியும் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியைக் கேட்ட அன்றே உயிர் துறந்தார்.


1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) மதிய உறக்கத்திற்குப் பின்னர் அவரின் உயிர் பிரிந்தது


அவர் இறந்தபோது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேறு எந்த வித சொத்தோ இல்லை. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.


நினைவுச் சின்னங்கள்


தமிழ்நாடு அரசு காமராசர் நினைவைப் போற்றும் வகையில்சென்னை கிண்டியில் நினைவிடம் ஒன்றை அமைத்துள்ளது. இங்குக் காமராசரின் மார்பளவுசிலை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் காமராசர் மணிமண்டபம் ஒன்றையும் அமைத்துள்ளது. இங்குக் காமராசரின் மார்பளவு சிலையும் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்குக் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது


திரைப்படங்கள்


2004 ஆம் ஆண்டு காமராஜ் என்கிற பெயரில் அவருடைய வாழ்க்கை வரலாற்றினைச் சித்தரிக்கும் திரைப்படம் வெளியானது. அதன் ஆங்கில மொழியாக்க குறுந்தகடு 2007-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.