உள்ஒதுக்கீடு விவகாரம் அரசுடன் இணைத்து போராட தயார் - மு.க.ஸ்டாலின்

 


 



7.5% உள்ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக அரசுடன் இணைத்து போராட தயார் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தமிழக அரசு இயற்றியது. இதனிடையே மருத்துவ இடங்களில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து சட்டத்தை 2020-2021 ஆம் கல்வி ஆண்டிலே அமல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கில் , உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.


அதில்,மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்னுமும் ஆளுநர் பரிசீலனையில் உள்ளது. ஆளுநருக்கு காலகெடுவோ, ஒப்புதல் அளிக்க உத்தரவோ நீதிமன்றத்தால் அளிக்க முடியாது


ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் மருத்துவ கல்லூரிகளில் கலந்தாய்வு சம்பந்தமான எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாது என்றும் தெரிவிக்கப்பட்டது.


ஆனால் எதிர்க்கட்சிகள் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன


7.5% உள் ஒதுக்கீடு தொடர்பாக நேற்று ஆளுநருடன் 5 அமைச்சர்கள் சந்தித்தனர்.இதன் பின் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்  பேசுகையில்,  மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தருவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளதாக கூறினார்.


இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதியளிக்கக் கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளேன் . இதில் அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார். கட்சிகளுடன் பேசி போராட்டத்தை அறிவித்திட  முதலமைச்சர் முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.