தொழில் முதலீடு- தமிழகம் - முதல்வர்

 



திருச்சி சாலையில் ஐடிசி நிறுவனத்தின் புதிய நுகர்பொருள் உற்பத்தி தொழிற்கூடத்தைத் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை திறந்துவைத்தார். அப்போது அவர் மேலும் பேசியது:


தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் பல்வேறு நாடுகளில் முன்னணி மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. இரண்டு உலக முதலீட்டாளர் மாநாடு மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் தமிழக அரசு அதிகளவில் அன்னிய முதலீடுகளை ஈர்த்துள்ளது


உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த் தொற்று சூழலிலும் 40 ஆயிரத்து 818 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து அதன் மூலம் 74 ஆயிரத்து 212 நபர்களுக்கு வேலை வழங்கும் வகையில் 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதன் மூலம் 2020 ஆம் ஆண்டில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 


ஐடிசி நிறுவனம் விராலிமலையில் உணவுப் பொருட்கள் உற்பத்தி திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஆயிரத்து 77 கோடி ரூபாய் முதலீடு செய்ய தமிழ்நாடு அரசுக்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.


அதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக இதுவரையில் சுமார் 820 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு 2 ஆயிரத்து 800 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 85 சதவீதத்திற்கு மேற்பட்ட வேலை வாய்ப்புகள் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிராமப்புற பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியளிக்கின்றது. 


மேலும் புதிதாக 150 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உணவு சார்ந்த பொட்டலம் தயாரித்தல் மற்றும் சேமிப்புக் கிடங்கு வசதிக்காகத் தனது இரண்டாம் கட்ட திட்டத்துக்கான கட்டுமான பணிகளை ஐடிசி நிறுவனம் தற்போது தொடங்கியுள்ளது. 


தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய இந்த பகுதியில் ஆர்வமுடன் முதலீடு செய்துவரும் ஐடிசி நிறுவனத்தின் இப்பணியைத் தொடங்கிவைப்பதில் மகிழ்ச்சி. தொழில் திட்டங்களைச் செம்மையாக உலகத் தரத்தில் செயல்படுத்தி வருகின்ற ஐடிசி நிறுவனத்திற்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்


அதோடு மட்டுமல்லாமல் இப்பகுதியில் பல்வேறு சமுதாய மேம்பாட்டுத் திட்டங்களையும் செயல்படுத்தி வரும் ஐடிசி நிறுவனம் தமிழ்நாட்டின் மென்மேலும் வளர்ந்து தமிழக மக்களுக்கு அதிகளவில் உதவி செய்திட முன் வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என்றார் தமிழக முதல்வர். 


விழாவில் மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தொழில்துறை அமைச்சர் எம். சி. சம்பத். உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ், முதன்மைச் செயலர் முருகானந்தம், ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி, விராலிமலை ஐடிசி நிறுவன மேலாளர் என். சரவணன், நீல்கிங்ஸ்டன் (நிர்வாக துணைத்தலைவர்), துணைத்தலைவர் சந்தீப் சந்திரசேகர், சிரிஷ்யாதவ் (டெக்னிக்கல்), பத்மநாபன்(மனிதவளம்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.