பஞ்ச சபைத் ஸ்தலங்களும், பஞ்சாட்சர வடிவமும்- தாமிர சபை  பகுதி  1

திருநெல்வேலி – தாமிர சபை  பகுதி  1



பஞ்ச சபைத் ஸ்தலங்களும், பஞ்சாட்சர வடிவமும்.


1, திருநெல்வேலி – தாமிர சபை – ந
2, திருக்குற்றாலம் – சித்திர சபை – ம
3, திருவாலங்காடு – இரத்தின சபை – சி
4, திருத்தில்லை {சிதம்பரம்} – பொற்சபை – வ
5, மதுரை – வெள்ளிசபை – ய


ஐம்பெரும் அம்பலங்கள் அல்லது ஐம்பெரும் மன்றங்கள் என்பது சிவன் நடனக் கோலத்தில் நடராசராகஎழுந்தருளியுள்ள சிவத்தலங்களுள் முக்கியமான ஐந்து தலங்களாகும்.


இத்தலங்களில் சிவனின் நடனம் நடைபெற்றதாக இந்து சமயப் புராணங்கள் கூறுகின்றன.


ஐம்பெரும் அம்பலங்கள் பொன்னம்பலம், வெள்ளியம்பலம், இரத்தினம்பலம், தாமிர அம்பலம், சித்திர அம்பலம் ஆகும்.


இவை சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய ஐந்து தலங்களிலுள்ள சிவன் கோவில்களில் அமைந்துள்ள நடராசர் சன்னிதிகளைக் குறிக்கின்றன.


    சிதம்பரம் நடராசர் கோயில்-பொன்னம்பலம்
    மதுரை மீனாட்சியம்மன் கோவில்-வெள்ளியம்பலம்
    திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில் -இரத்தினம்பலம்
    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்-தாமிர அம்பலம்
    குற்றாலநாதர் கோயில்- சித்திர அம்பலம் (சித்திர சபை).


இவை கனகசபை, இரத்தினசபை, வெள்ளி சபை, தாமிர சபை, சித்திர சபை என்றும் அழைக்கப்படுகின்றன.



தாமிர அம்பலம் அல்லது தாமிர சபை எனப் பெயர் கொண்டது, திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் அமைந்துள்ள நடராசர் சன்னிதியாகும்.


நெல்லையப்பர் கோவிலின் உட்புறம் அமைந்துள்ள இந்த அம்பலம் சிறந்ததொரு கலைப்படைப்பாகும். ஆருத்திரா தரிசன விழாவின் போது இங்கு நடராசர் மற்றும் சிவகாமியின் உருவச் சிலைகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.


சந்தன சபாபதி என அழைக்கப்படும் நடராசர் தாமிர அம்பலத்துக்குப் பின்னால் உள்ளார்.


சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்ட இவரைத் தாமிர அம்பலத்தின் வழியாகப் பார்க்கும் காட்சி மிகவும் அருமையாக இருக்கும். பெரிய சபாபதி என்ற மற்றொரு சன்னிதியும் இக்கோவிலில் நடராசருக்கு உள்ளது.


சிறப்பு விசேட நாட்களில் இவருக்கு பூசைகள் நடைபெறுகின்றன. இந்த உற்சவ மூர்த்தி கோவிலுக்கு வெளியே எடுத்துச் செல்லப்படுவதில்லை.


திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.


சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலி நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தை பற்றி வழங்கும் நூல்கள் மூன்றாம் திருமுறை, ஏழாம் திருமுறை மற்றும் பன்னிரெண்டாம் திருமுறை, திருவிளையாடல் புராணம் முதலிய நூல்களாகும்.


கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து சைவ சமயத்தை வளர்த்த திருஞானசம்பந்த பெருமான் திருநெல்வேலி என்ற பெயருடன் "திருநெல்வேலிப் பதிகம்" பாடியிருப்பதால் அதற்கு முன்பே "திருநெல்வேலி" என்று வழங்கப்பட்டிருக்க வேண்டும்.


இதனால் இத்தலம் ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே சிறப்பு பெற்றது என விளங்குகிறது.


தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து அம்பலங்களில், இரண்டு அம்பலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயம் தாமிர அம்பலமாகவும், ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர அம்பலமாகவும் உள்ளன.


கோயிலின் மூலக்கதை




காந்திமதியம்மன் கோயில் கோபுரம்



முன்பொரு காலத்தில் அரண்மனைக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தாராம் ராமகோனார். அப்படி ஒருநாள் அவர் சென்று கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது.


இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, பயந்து போன ராமகோனார் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார்.


அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற முயல கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது. அனைவரும் செய்வறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டதாம்.


அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். (இன்னமும் மூலவரின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம்.) சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது.


நாளை பகுதி  2 தொடரும்.


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.


ஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்


திருச்சிற்றம்பலம்.


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்