புதுச்சேரியில் நாய் மீது கல் வீசிய இளைஞரை விரட்டிச்சென்று கத்தியால் குத்திக் கொலை செய்ததாக முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாய் மீது கொண்ட அளவுகடந்த பாசத்தால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
புதுச்சேரி கருவடிக்குப்பத்தை சேர்ந்த சாம்சன் என்கிற (நாய் சேகர்) 62 வயதான முதியவர் (சாம்சன்) தனது வீட்டில் 5க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வளர்த்து வந்தார். கொத்தனாராக வேலைபார்த்து வந்தாலும் நாய்கள் மீது கொண்ட அளவற்ற பாசத்தால் தன்னைப்பற்றி கவலைப்படாமல் அவற்றிற்கு உணவு போடுவது அன்புகாட்டுவது என்று மிகுந்த நாய் நேசராக இருந்ததாக கூறப்படுகின்றது.
அவரது வீட்டுக்கு அருகில் இருந்த பிரதாப் என்ற 21 வயது பெயிண்டருக்கும் சாம்சனின் நாய்களுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்துள்ளது. சாம்சனின் நாய்கள் பிரதாப்பைக் கண்டால் குறைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளது. சாம்சன் எப்போதும் நாய்களுடன் இருந்ததால், அந்த பகுதி இளைஞர்கள் தங்களுக்குள் பேசும் போது அவரை நாய் சேகர் என்றே அழைத்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று பிரதாப், தனது நண்பர்களுடன், சாம்சனின் வீட்டை தாண்டி நடந்து சென்றபோது அவர்களை நோக்கி நாய்கள் குரைக்க அதில் ஒரு நாய் குரைத்தபடியே ஓடி வந்துள்ளது. இதையடுத்து கீழே கிடந்த கல்லை எடுத்து அந்த நாயை நோக்கி வீசியுள்ளார் பிரதாப் , நாய் மீது பட்டதால் வீட்டுக்குள் திரும்பி ஓடிய அந்த நாய் வலியால் அலறியுள்ளது.
இதை கண்டு ஆத்திரமடைந்து வெளியே வந்த சாம்சன், நாயை கல்லால் அடித்தது ஏன் ? எனக்கேட்டு சண்டையிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பான நிலையில் தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால், பிரதாப்பை குத்தியுள்ளார் சாம்சன்.
அவரை காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் நண்பர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர் அங்கு பிரதாப்பை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததை உறுதி செய்தனர்.
இதையடுத்து பிரதாப்பின் தந்தை அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், சாம்சனின் வீட்டுக்கு செல்ல அங்கு நின்ற நாய்கள் போலீசாரை நுழைய விடாமல் குரைத்துள்ளது. பின்னர் ஒரு வழியாக நாய்களை சமாளித்து வீட்டுக்குள் சென்ற போலீசார் கிழிந்த சட்டையுடன் பதுங்கி இருந்த சாம்சனை கைது செய்தனர்.
விசாரணையில் தன்னுடைய நாய்க்கு ஏற்பட்ட வலியை உணர வைப்பதற்காக தான் பிரதாப்பை கத்தியால் குத்தியதாக நாய் நேசர் சாம்சன் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகின்றது.
அதே நேரத்தில் செல்லப் பிராணிகள் மீது பாசம்காட்டுவதில் தவறில்லை, அதைவிட மனிதர்களை நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டும் காவல்துறையினர், மனித தன்மையற்ற விலங்குகள் பாசம் விபரீதத்தில் தான் முடியும் என்று எச்சரிக்கின்றனர்.