கரோனா உறுதி வீடுகளில் தகரம் அடிக்கப்படாது: மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



தளர்வுகள் நடைமுறைக்கு வந்துள்ளதால் நோய்த் தொற்றை கவனமாக கையாள வேண்டும். சென்னை மாநகராட்சியில் மேற்கொண்டு வரும் பரிசோதனை எண்ணிக்கை 11 லட்சத்தை நெருங்கஉள்ளது. தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் உட்பட பணிசெய்யும் இடங்களில் தொடர்ச்சியாக பரிசோதனை செய்வதை அதிகப்படுத்த உள்ளோம்.


பிற மாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்கள் இனி வீட்டில் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள். வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் மட்டும்தான் பரிசோதனை செய்யப்படும். அறிகுறிகள் இல்லையென்றால் அவரவர் வீடுகளுக்கு சென்று 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.


தளர்வுகள் நடைமுறைக்கு வந்துள்ளதால் நோய் தொற்று குறைந்துவிட்டது என்ற தவறான புரிதல் யாருக்கும் வந்துவிட கூடாது. குறைந்தது  முகக்கவசம் அணியாமல் வெளியே செல்லக் கூடாது.தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். 


பொதுமக்கள் ஒத்துழைப்பு சிறப்பாக உள்ளது போன்ற காரணங்களால் வீடுகளில் தகரம் அடிப்பது நிறுத்தப்பட்டுவிட்டது. கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகளில் இனி தகரம் அடிக்கப்படாது என்று சென்னை மாநகராட்சி ஆணையர்  கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.