குறைவான விலையில் விற்பனைக்கு வந்தது கியா சொனெட்

 



 


இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த கியா சொனெட் கார் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.


கியா நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனை செய்து கொண்டிருக்கும் செல்டோஸ் மற்றும் கார்னிவல் ஆகிய இரு கார்களுக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக கியா செல்டோஸ் எஸ்யூவி விற்பனையில் சக்கை போடு போடுகிறது. இந்த உற்சாகத்துடன் இந்தியாவில் தனது 3வது தயாரிப்பான சொனெட் காரை கியா இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.


கடும் போட்டி நிறைந்த இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில் கியா சொனெட் கார் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. கியா சொனெட் எஸ்யூவி கார், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்திய ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில் கான்செப்ட் மாடலாக காட்சிக்கு வைக்கப்பட்டது. அப்போதே கியா சொனெட் குறித்த எதிர்பார்ப்பு இந்தியர்கள் மத்தியில் மேலோங்கி விட்டது.


இதன்பின் கியா சொனெட் காரின் தயாரிப்பு நிலை மாடல் கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. அத்துடன் கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி முதல் சொனெட் காருக்கான முன்பதிவுகளையும் கியா ஏற்க தொடங்கியது. முன்பதிவு தொடங்கப்பட்ட 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே கியா சொனெட் காருக்கு, 6,500க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்தன.


கொரோனா ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், விலை எவ்வளவு? என்பது தெரியாத சூழலிலும் வாடிக்கையாளர்கள் பலர் போட்டி போட்டு கொண்டு கியா சொனெட் காரை முன்பதிவு செய்ய தொடங்கினர். நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே சென்ற நிலையில், செப்டம்பர் 18ம் தேதி (இன்று) கியா சொனெட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.


கியா சொனெட் காரின் முன் வரிசையில் வென்டிலேட்டட் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், எலெக்ட்ரிக் சன் ரூஃப், வயர்லெஸ் போன் சார்ஜர், 57 வசதிகளுடன் யுவோ கனெக்டிவிட்டி சூட் உள்ளிட்ட வசதிகளும் கியா சொனெட் எஸ்யூவி காரில் இடம்பெற்றுள்ளன. தொழில்நுட்ப ரீதியில் குறை சொல்ல முடியாத காராக கியா சொனெட் உள்ளது