இந்திய-சீன இராணுவ அதிகாரிகள் சுமூக பேச்சு வார்த்தை


இந்திய எல்லையின் காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.  இதற்கு நம் வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதையடுத்து எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது.


பிரச்னைக்கு சுமுக தீர்வு காண இரு நாட்டு ராணுவ மற்றும் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை  நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தை  லடாக் அருகே சீன எல்லைக்குள் உள்ள மோல்டோ என்ற இடத்தில் 21.09.2020 துவங்கியது.


நம் தரப்புக்கு லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங்கும் சீனாவுக்கு மேஜர் ஜெனரல் லியு லின்னும் தலைமை வகித்தனர்.முதல் முறையாக இந்த பேச்சின் போது இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளும் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஏற்கனவே இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையே ரஷ்யாவில் நடந்த பேச்சுவார்த்தையின்  போது இரு நாட்டு எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இரு நாட்டு வீரர்களும் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்" என்பது உள்ளிட்ட ஐந்து அம்சங்கள் அடங்கிய ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் நேற்றைய பேச்சுவார்த்தை  நடந்தது.