63 நாயன்மார் பட்டியல் - குலச்சிறையார்

நமது உண்மை   செய்திகள் ஆன்மீக குழுவிலிருந்து தினம் ஒரு நாயன்மார் வரலாறு :


“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே” 


சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும்.


குலச்சிறையார்


 



உலகெங்கும் இன்று சைவ நெறி தழைத்தோங்குவதற்குக் காரணம், நாயன்மார்கள். புற சமயங்களால் தன் புகழ் மங்கியிருந்த சைவ சமயம் மீண்டும் எழவும் நாடெங்கும் சிவ வழிபாடு தழைத்து ஓங்கவும், நாயன்மார்களின் ஒப்பற்ற தியாகமும் முயற்சியுமே காரணம்.


தமிழகத்தில், சைவ வழிபாட்டில் முக்கியமான தலங்களில் ஒன்றாகக் கருதப்படுவது மதுரை. ஈசன் தன் பக்தர்களுக்கு அருள்பாலிக்க பல்வேறு திருவிளையாடல்கள் புரிந்து அருள்செய்ததும் இந்தத் தலத்தில்தான். அத்தகைய திருத்தலம், ஒரு காலத்தில் பிற சமயங்களின் ஆதிக்கத்தால் நிறைந்து விளங்கியது.


சிவ ஆலயங்கள் வழிபாடுகள் இன்றி மூடப்பட்டன. அப்படியே வழிபாடுகள் நிகழ்ந்தாலும் அதில் பெரும்பாலானோர் கலந்துகொண்டு வழிபட பயந்தனர். காரணம், அரசனை வழி நடத்திய பிற சமயத்தவர், கோயிலுக்கு வழிபட வரும் சைவர்களை அச்சுறுத்திவந்தனர். அந்த நிலையில்தான், 'நின்றசீர் நெடுமாறன்' என்னும் பாண்டிய மன்னனுக்கு அமைச்சராக வந்து சேர்ந்தார், குலச்சிறையார்.


குலச்சிறையார் என்பவர்சைவ  சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்கள் ஒருவர் ஆவார். புகழ்பெரும் சிறப்புடைய பாண்டிநாட்டின் வளம்பல பெருக்கிய ஓர் ஊர் மணமேற்குடி. இவ்வூரினது தலைவராகத் திகழ்ந்தவர்.


குலச்சிறையார், மணல்மேல்குடி என்னும் தலத்தில் அவதரித்தவர். இந்தத் தலத்தில்தான் மாணிக்கவாசகப் பெருமான் எழுப்பிய ஜகதீஸ்வரர் ஆலயம் உள்ளது. குலச்சிறையார், இந்த ஆலயத்து இறைவனை வணங்கி பக்தியோடு வளர்ந்தார். சிவன் மேல் பக்தி பெருகியதுபோலவே அவருக்கு சிவனடியார் மீதும் பக்தி பெருகியது. அடியார்க்கு செய்யும் தொண்டே ஆண்டவருக்கு செய்யும் தொண்டு என்பதை அறிந்துகொண்டார்.


இவர் நம்பியாரூரரால் பெருநம்பி எனப் போற்றப்பட்ட பெருந்தகையாளர். திருத்தொண்டிற் சிறந்த இத்தொண்டர் சிவனடியார்களை முத்திகாரணர் எனத் துணிந்தவர். ஆதலால் சிவனடியார்களிடத்து மிகுந்த வாரப்பாடு உடையவராயிருந்தார்.


பாண்டிநாட்டிலே, மணமேற்குடியிலே, குலச்சிறைநாயனார் என்பவரொருவர் இருந்தார். அவர் விபூதி உருத்திராக்ஷந்தரிக்கின்றவர்களும் ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை ஓதுகின்றவர்களுமாகிய சிவனடியார்களை, உயர்குலம் இழிகுலங்களும் நற்குணம் தீக்குணங்களும் பாராமல் வணங்கித் துதிக்கின்றவர்.


அவ்வடியார்கள் பலர்கூடி வரினும், ஒருவர் வரினும், அன்பினோடு எதிர்கொண்டு அழைத்துத் திருவமுது செய்விக்கின்றவர். பரமசிவனுடைய திருவடிகளை அநுதினமுஞ் சிந்தித்துத் துதித்து வணங்குகின்றவர். நெடுமாறர் என்னும் பெயரையுடைய பாண்டியருக்கு முதன் மந்திரியாராயினவர்.


மதுரையின் மன்னன் நின்றசீர் நெடுமாறப் பாண்டியன். சைவ சமயத்தைச் சேர்ந்தவனாக இருந்தபோதும், சமணர்களின் உபதேசங்களில் ஈடுபாடு கொண்டு, அவர்களின் சமயத்திற்கு மாறினார். இவரின் மனைவி மங்கையர்க்கரசியார்  இவர், தீவிர சிவபக்தர். தன் கணவனின் சமய மாற்றத்தை நினைத்து மனம் வருந்தி, மீண்டும் சைவம் தழைக்க ஈசனை நாள்தோறும் வேண்டி வந்தார்.


அந்தப் பாண்டியருடைய மாதேவியாராகிய மங்கையர்க்கரசியார் செய்கின்ற திருத்தொண்டுக்குத் துணைசெய்கின்றவர்.


கீழ்மக்களாகிய சமணர்களுடைய பொய்ச்சமயத்தைக் கெடுத்து, பாண்டி நாடெங்கும் திருநீற்றை வளர்க்கும் பொருட்டு, பரசமய கோளரியாகிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருடைய திருவடிகளை வணங்கிய சிறப்பினையுடையவர்.


புறச்சமயிகளுடைய துர்ப்போதனையினாலே ஆன்மாக்கள் சற்சமயமாகிய சைவத்தை விட்டு அவர்களது சமயப் படுகுழியிலே விழுந்து கெடுதலைக் காணின், மிக இரங்கிக் கவலை கொண்டு, அப்புறச்சமயங்களை ஒழித்து, சைவத்தை வளர்த்தற்கு வேண்டும் முயற்சியைச் சிரத்தையோடு செய்தல் மிக மேலாகிய சிவபுண்ணியமாம்; அது செய்யாமை மிகக் கொடிய பாதகமாம். அம்முயற்சி சிரத்தையோடு செய்யப்படுமாயின், வேண்டுவார் வேண்டியதே ஈவாராகிய சிவன் அதனை முற்றுவித்தருளுவர்


ஒரு முறை திருஞான சம்பந்தர், பாண்டிய நாட்டுக்கு அருகில் இருந்த திருமறைக்காட்டுக்கு வந்ததாகத் தகவல் அறிந்தார் குலச்சிறையார். அன்னை உமையவளிடம் ஞானம் பெற்ற திருஞான சம்பந்தரை மதுரைக்கு அழைத்துவந்தால், இங்கிருக்கும் அஞ்ஞான இருளை அழித்துவிடலாம் என்று அரசி மங்கையர்க்கரசியாரிடம் தெரிவித்தார். உடனே மனம் மகிழ்ந்த அரசியும், ஞானசம்பந்தரை மதுரை அழைத்துவர ஏற்பாடுகள் செய்யச் சொன்னார். அதன்படி ஞான சம்பந்தரும் மதுரை மாநகரம் வந்தார்.



'ஞானசம்பந்தர், மன்னனின் உள்ளத்தையும் மாற்றிவிடலாம்' என்று அஞ்சிய சமணர்கள், சம்பந்தர் இருந்த மண்டபத்தைத் தீக்கிரையாக்கினர். இதனால் மனம் வருந்திய சம்பந்தர், " தீ எய்தவரையே சென்று சேரட்டும்" என்று கூறினார். உடனே தீயின் வெப்பம் மன்னனின் வயிற்றைச் சென்றடைந்தது. மன்னன் தீராத வெம்மை நோயினால் அவதியுற்றார். 





சமணர்கள், தங்களால் இயன்ற அனைத்து வைத்தியங்களையும் மந்திரங்களையும் செய்தும் மன்னனின் நோய் நீங்கவில்லை. அரசியாரும் குலச்சிறையாரும் மன்னரை அணுகி, சம்பந்தரின் பெருமைகளை எடுத்துச் சொல்ல, மன்னரும் சம்பந்தரை சந்திக்கச் சம்மதித்தார். சம்பந்தர் கைத் திருநீறு பட்ட கணத்தில் பாண்டியனின் நோய் குணமடைந்தது. அந்த நேரத்தில், மன்னனை நிறைத்திருந்த அஞ்ஞான இருளும் அகன்று சிவஞானம் உண்டாயிற்று. மீண்டும் மதுரையில் சைவம் தழைத்து ஓங்கியது. பாண்டியமன்னன், பல்வேறு திருப்பணிகளைச் செய்து மென்மேலும் சைவ சமயத்தைத் தழைக்கச் செய்தார்.















இவை அனைத்திற்கும் காரணமாகத் திகழ்ந்தது குலச்சிறையாரின் பக்தியே ஆகும். அதனால்தான், சுந்தரமூர்த்திநாயனாராலே திருத்தொண்டத் தொகையிலே "பெருநம்பி" என்று வியந்துரைக்கப்பட்டவர்.' 'குணங்கொடு பணியுங் குலச்சிறை'  என ஞான சம்பந்தரும் குலச்சிறையாரைப் போற்றிப் பாடியுள்ளனர்.


பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை




























குலச்சிறை நாயனார்
பெயர்:குலச்சிறை நாயனார்
குலம்:மரபறியார்
பூசை நாள்:ஆவணி அனுஷம்
அவதாரத் தலம்:மணமேல்குடி
முக்தித் தலம்:மதுரை




இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும். 


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்