காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்


கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி ( 42) சென்னையில் காலமானார்.


விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் நடித்து, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டவர்.


நடிகர் வடிவேல் பாலாஜி. மதுரையைச் சேர்ந்த 42 வயதாகும் பாலாஜி, நடிகர் வடிவேலுவை போலவே உடலமைப்பை கொண்டு நடித்து வந்தார்.


இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில்,  பணவசதி இல்லாத காரணத்தினால், அங்கிருந்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றபட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார்.


அதன்பின், ஓமந்தூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றபட்டுள்ளார்.


அங்கே கொரோனா நோயாளிகள் அதிகளவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு இன்று காலை மாற்றப்பட்டார்.


அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  அவர் காலமானார்.


தனது திறமையால் பலரையும் சிரிக்கவைத்த வடிவேல் பாலாஜியின் மறைவிற்கு அவரின் ரசிகர்கள், அவருடன் பணியாற்றியவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.