அறிஞர் அண்ணா( 15/09/2020) ஒரு கண்ணோட்டம் பகுதி 2

அறிஞர் அண்ணா  (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 3 பெப்ரவரி, 1969)



 


அரசியலில் நுழைவு


அண்ணாதுரை அரசியலில் ஈடுபாடு கொண்டு நீதிக்கட்சியில் 1935 [17] இல் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். நீதிக்கட்சி பிராமணரல்லாதோருக்கான அமைப்பாக 1917 இல் மதராஸ் ஒருங்கிணைப்பு இயக்கம் என்ற அமைப்பிலிருந்து உருவாக்கப்பட்டது.


ஆரம்பத்தில் பிராமணரல்லாதோர் மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கும் விதத்திலும் அவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு வழிவகை செய்யும் விதமாக பல உதவிகளை புரிந்து வந்தது.


பின்னாளில் இது அரசியல் கட்சியாக சர். பி.டி. தியாகராய செட்டி மற்றும் டி. எம். நாயர் தலைமையில் துவக்கப்பட்டது. இக்கட்சி பின்னர் தென்னிந்தியர் நலவுரிமைச் சங்கம் எனப் பெயரிடப்பட்டு பின் நீதிக்கட்சியாக பெயர்மாற்றம் கண்டது.


இக்கட்சியே சென்னை இராசதானியில் சுயாட்சி முறையை பின்பற்றி 1937 இல் இந்திய தேசிய காங்கிரசால் தோற்கடிக்கப்படும் வரை ஆட்சியில் இடம்பெற்றிருந்தது.


அந்த நேரத்தில் அண்ணாதுரை நீதிக்கட்சியில் பெரியாருடன் சேர்ந்தார். பெரியார் அப்பொழுது நீதிக்கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார்.


அண்ணாதுரை நீதிக்கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராக பொறுப்பேற்றிருந்தார்.


பின்பு விடுதலை மற்றும் அதன் துணைப் பத்திரிகையான குடியரசு பத்திரிகைக்கு ஆசிரியரானார்.


பிறகு தனியாக திராவிட நாடு என்ற தனி நாளிதழைத் (திராவிட நாடு தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி துவக்கப்பட்டது) தொடங்கினார்.


1944 இல் பெரியார் நீதிக்கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றினார். தேர்தலில் போட்டியிடுவதையும் கைவிட்டார்


ஆளும் காங்கிரசுக் கட்சிக்கெதிராக பல்வேறு போராட்டங்களில், பல்வேறு காலகட்டங்களில் ஈடுபட்டு அவ்வாட்சியை எதிர்க்கலானார். இறுதியில் 1965 இல் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் மிகத்தீவிரமாக ஈடுபடலானார். இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதன் விளைவாக மக்களாதரவை அவரும், அவரது கட்சியான திராவிட முன்னேற்றக் கட்சியும் அபரிமிதமாக பெற்றன.


கடமை கண்ணியம் கட்டுபாடு


அறிஞர் அண்ணா அவரது கட்சியின் முக்கிய கொள்கை முழக்கமாகவும் அவரது கட்சியின் பண்பாடாகவும் இம்மூன்று வார்த்தைகளை முன்மொழிந்தார்.


பொதுவாழ்வில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய அடிப்படையான பண்பாடுகள் இவை.


கட்டுப்பாடு, கடமை ஆகியவை தனிப்பட்டு ஓர் அமைப்புக்குள் இருப்பவர் கடைப்பிடிக்க வேண்டிய குணநலன்களாக கருதபடுகின்றது. கண்ணியம் என்பது பொதுவாக மற்றவர்களுடனும், அதிலும் சமுதாயத்தில் - அரசியலில் கலந்து கொள்ளும் அனைவருடனும் ஒருவருக்கொருவர் காட்டிடும் மதிப்பு, மரியாதை என்பனவற்றைக் குறிக்கும்.


வேறுபட்ட கட்சிகள், மாறுபட்ட வெறுப்போ, விரோதமோ இல்லாமல், எதிர் நிற்பவர்களையும் நண்பர்களாகப் பாராட்டும் தன்மை பொதுவாழ்வில் மிகவும் தேவையான ஒரு பண்பாடு ஆகும்.


தத்துவம்


அண்ணாதுரை இந்துக் குடும்பத்தில் பிறந்தவராயிருந்தாலும் அவரின் கோட்பாடு சமயம் சாராதவராகவே வெளிப்படுத்துகின்றது. அவர்
“  ஒன்றே குலம், ஒருவனே தேவன்  ” என்ற கோட்பாட்டை வெளிப்படுத்தினார்..
“  கடவுள் ஒன்று, மனித நேயமும் ஒன்று தான்  ” என்பது அவர் கட்சியின் கொள்கை பரப்பாகவும், அவரின் தொண்டர்களாக கருதப்படும் அவரின் தம்பிகளின் கட்சி வாசகமாகவும் பின்பற்றப்பட்டது. அவர் ஒரு நேர்காணலில் ".....நான் எப்போழுதுமே கடவுளிடம் உண்மையான நம்பிக்கையுடன் வாதாடுபவன்......" என்றார்.


அண்ணாதுரை மூடநம்பிக்கை மற்றும் சமயச் சுரண்டல்களையும் பலமாகச் சாடினார், ஆனால் என்றுமே அவற்றின் சமூக தத்துவார்த்தங்களில் தலையிட்டதோ எதிர்த்ததோ இல்லை.


பெரியாருடன் கருத்து வேறுபாடு மற்றும் திமுக உருவாதல்
பிரித்தானிய காலணிய ஆதிக்கத்தை இந்திய தேசிய காங்கிரசு மிக வன்மையாக எதிர்த்து இந்தியாவின் சுதந்திரத்துக்கு வழிவகுத்தது.


இக்கட்சி பெரும்பாலும் பிரமாணர்கள் மற்றும் வட இந்தியர்களின் ஆதிக்கம் மிகுந்த கட்சியாக தென்னிந்திய மக்களாலும் குறிப்பாக பெரியாராலும், தமிழர்களாலும் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.


இவர்களிடமிருந்து தென்னிந்தியாவை மீட்கப் பெரியார் பெரிதும் விரும்பினார். இக்காரணங்களை முன்வைத்தே பெரியார் இந்தியாவின் சுதந்திர தினமான ஆகத்து 15, 1947 அந்த நாளை கருப்பு தினமாக எடுத்துக்கொள்ளுமாறு அவரின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.


அண்ணாதுரை இக்கருத்தில் முரண்பட்டார். இக்கருத்து பெரியாருக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் கருத்து வேறுபாட்டால் விரிசல் ஏற்படக் காரணமாயிற்று. அண்ணாதுரை இந்தியாவின் சுதந்திரம் அனைவரின் தியாகத்தாலும், வியர்வையினாலும் விளைந்தது. அது வெறும் ஆரிய, வடஇந்தியர்களால் மட்டும் பெற்றது அல்ல என்பதை வலியுறுத்தினார்.


திராவிடர் கழகம் சனநாயகமான தேர்தலில் பங்குகொள்ளாமல் விலகி நிற்கும் பெரியாரின் கொள்கையை எதிர்த்தும் அண்ணாதுரை முரண்பட்டார். இதன் வெளிப்பாடாக 1948 இல் நடைபெற்ற கட்சிக்கூட்டத்திலிருந்தும் வெளிநடப்பு செய்தார்.


அண்ணாதுரை, மற்றும் பெரியாரின் அண்ணன் மகன் மற்றும் வாரிசு என கருதப்பட்டவரும், திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தவருமான ஈ.வெ.கி. சம்பத் மற்றும் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தவர்களுடன் இணைந்து புதிய கட்சி துவங்க முடிவெடுக்கப்பட்டு, அதன்படி அக்கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் சூட்டப்பெற்றது.


"அண்ணாதுரை ஏழைகள் மற்றும் கீழ்த்தட்டு சாதி வகுப்பினரின் சமூக உரிமைகளுக்காக பாடுபட்டமையால் அம்மக்களின் "அபரிமிதமான செல்வாக்கை வெகு விரைவிலேயே பெற்றார்" என்று 'இந்தியாவின் தலித் கலைக்களஞ்சியம்' கூறுகிறது.


அவர் தொடங்கிய தி.மு.க. வும் செல்வாக்கை பெற்றது. தேர்தல் அரசியலில் ஆர்வம் கொண்ட திமுக, பங்கெடுத்த முதல் சட்டமன்ற தேர்தலிலேயே 13 இடங்களை கைப்பற்றியது


இந்தியா மொழிவாரி மாநிலமாக அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் என சென்னை இராசதானியிலிருந்து (மெட்ராஸ் இராஜதானி) அந்தந்த மொழிவாரியான மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழர்கள் வாழும் பகுதி மதராஸ் மாநிலமாக உருவாக்கப்பட்டது.


இதன் உள்ளார்ந்த உண்மையை அறிந்த பிறகு அண்ணாதுரை திராவிட நாடு திராவிடர்களுக்கே என்ற கோரிக்கையை கைவிட்டு தமிழ்நாடு தமிழர்களுக்கே என்று மாற்றினார்.


1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்:


இந்தி முதன்முதலில் அலுவலக மொழிக்கான தகுதியான மொழியாக மோத்திலால் நேரு தலைமையிலான குழு இந்திய அரசாங்கத்திற்கு (பிரித்தானிய அரசாங்கம்) பரிந்துரைச் செய்தது. அது முதல் தமிழ் நாட்டில் பலதரப்பட்ட மக்களாலும், அரசியல் தலைவர்களாலும் எதிர்ப்புகள் காட்டப்பட்டன. இதனால் தமிழ் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக இந்தி பேசும் வட இந்தியர்களால் தமிழர்கள் வேறுபடுத்தி காட்டப்பட்டனர்.


இந்திய மொழிகளில் இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக வைப்பது - இந்தியை தாய்மொழியாகக் கொண்ட நல்ல கால் உடையவர்களுக்கும் இந்தியை தாய்மொழியாகக் கொள்ளாத ஊனக்கால் உடையவர்களுக்கும் இடையே வைக்கும் ஓட்டப் பந்தயம் போன்றது.


மொழி உணர்வுக்கு மதிப்பு அளிக்கப்படுவது உண்மையாயின், ஒரு மொழி எத்தனை சதவிகிதத்தினரால் பேசப்படுகிறது என்ற ஆராய்ச்சியே அநாவசியமானது.


நாளை  பகுதி 3  தொடரும்.




இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின்  பயணம் தொடரும்.




தொகுப்பு மோகனா செல்வராஜ்