சப்த விடங்க தலங்கள் நாகைக்காரோணம் சுந்தரவிடங்கர் கோயில் பகுதி 1

நாகைக்காரோணம்  சுந்தரவிடங்கர்   கோயில் பகுதி 1


சப்தவிடங்கத்தலங்கள் என்பவை தமிழ்நாட்டில் உள்ள நடனத்தை அடிப்படையாகக் கொண்ட வழிபாட்டுத் தலங்கள் ஆகும்.


" alt="" aria-hidden="true" />


நாகைக்காரோணம் என்கின்ற நாகப்பட்டினம் சப்தாவிடங்க தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள ஸ்ரீ நீலாயதாக்ஷி சமேத ஸ்ரீ காயாரோகணேஸ்வரர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவஸ்தலம். இந்த கோவில் மதுரை மீனாக்ஷி அம்மன், காஞ்சி காமாக்ஷி அம்மன் மற்றும் காசி விசாலாக்ஷி அம்மன் கோவில்களை போல நீலாயதாக்ஷி அம்மன் கோவில் என்று தான் அழைக்கப்படுகிறது.  மூலவர் – ஸ்ரீ காயாரோகணேஸ்வரர் ( ஆதிபுராணர் ), அம்பாள் –ஸ்ரீ நீலாயதாக்ஷி ( கருந்தடங்கண்ணி ), ஸ்ரீ தியாகராஜர் (சுந்தரவிடங்கர்),  நடனம் – தரங்க நடனம். சப்தவிடங்கத் தலங்களில் இரண்டாவது தலம். கடற்கரை வீசி நடனம் – பாராவாரதரங்க நடனம் ( கடலில் அலை ஆடுவது போல் ).


தலமரம் – மாமரம்,  தீர்த்தம் – புண்டரீக தீர்த்தம் ,தேவ தீர்த்தம்,  புராண பெயர் - நாகை காரோணம்


தற்போதைய பெயர் - நாகப்பட்டினம், மாவட்டம் - நாகப்பட்டினம், மாநிலம் - தமிழ்நாடு 


பாடியவர்கள்


சம்பந்தர்.  தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 82வது தலம்.


  • சோழ மன்னர்களின் தலைநகரங்களுள் ஒன்றாக விளங்கிய தலம் 

  • புண்டரீக முனிவரை இறைவன் தன் மேனியில் ஆரோகணம் செய்து கொண்ட தலம் 

  • சிறப்பு மூர்த்தியாக நாகாபரணப் பிள்ளையாரும் அருள்புரியும் தலம் 

  • இத்தலத்து விருட்சமான மாமரம், இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று சுவைகளுடன் இருக்கிறது. இம்மரம் கோயிலின் தென்கிழக்கு பிரகாரத்திலிருந்து பார்க்கும் போது, நந்தி வடிவில் தோற்றமளிக்கிறது


தல சிறப்பு



  • இக்கோயில் முகப்பிலுள்ள விநாயகர், உடலில் நாகத்தை ஆபரணமாக சூடி, தலைக்கு மேலே, மற்றொரு நாகம் குடை பிடித்தபடி இருக்க அதன் கீழே காட்சி தருகிறார். எனவே இவர், "நாகாபரண விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார். நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு, ராகு காலத்தில் பாலபிஷேகம் செய்வித்து வேண்டிக்கொள்கிறார்கள். ராகு, கேது பெயர்ச்சியின்போது இவருக்கு விசேஷ பூஜைகளும் நடக்கிறது.

  • கோயில்களில் நாய் வாகனத்துடன் காட்சி தரும் பைரவர், இங்கு சிம்ம வாகனத்துடன் காட்சி தருகிறார். புண்டரீக தீர்த்தக்கரையில் இவரது சன்னதி இருக்கிறது. புண்டரீகர், சிவனை வழிபட்டபோது, காசியின் கங்கை தீர்த்தம் இங்கு பாதாளத்திலிருந்து பொங்கியது. அப்போது, கங்கைக்கரையில் உள்ள பைரவரும், இங்கு எழுந்தருளினார். இவரே இங்கு, "காலசம்ஹார பைரவராக' அருளுகிறார். இவருக்கு பின்புறம் சிம்ம வாகனம் இருக்கிறது. காலனை (எமன்) சம்ஹாரம் செய்த சிவனே, இங்கு பைரவர் வடிவில் அருளுவதாக ஐதீகம். இவர் எமனுக்குரிய தென்திசையை நோக்கியிருப்பதால், ஆயுள் பலம் கிடைக்க இவரிடம் வேண்டிக்கொள்ளலாம். இவர் உக்கிரமானவராக காட்சி தருவதால், சாந்தமாக்க எதிரில் இரண்டு விநாயகர்களை ஒரு சன்னதியில் பிரதிஷ்டை செய்துள்ளனர். 

  • பிரகாரத்தில் எட்டு கரங்களில் ஆயுதங்களுடன், "அஷ்டபுஜ பைரவர்', அஷ்டபுஜ காளிக்கும் சன்னதி இருக்கிறது.

  • எண்திசைகளுக்கு அதிபதிகளான அஷ்டதிக் பாலகர்கள், இங்கு சிலை வடிவில் காட்சி தருகின்றனர். 

  • நான்கு தந்தங்கள் கொண்ட, இரண்டு யானைகள் அபிஷேகம் செய்தபடி இருக்க, இரு கால்களையும் தொங்கவிட்டபடி உள்ள கஜலட்சுமியையும் இங்கு தரிசிக்கலாம். 

  • சுவாமி கோஷ்டத்தில் 8 சீடர்களுடன் தட்சிணாமூர்த்தி இருக்கிறார்.

  • சுவாமி சன்னதி முன்மண்டபத்தின் மேல் பகுதியில் 12 ராசி சக்கரம் உள்ளது. 

  • மாசி மகத்தன்று, சிவன் கடலுக்குச் சென்று, தீர்த்தமாடும் வைபவம் நடக்கும். 

  • இங்குள்ள ஆறுமுகர் சிலை, திருவாசியுடன் சேர்த்து 12 கரங்களில், ஆயுதங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. 

  • பிரகாரத்தில் அதிபத்த நாயனார் , வல்லப கணபதி , அகோர வீரபத்ரர் , ஆத்மலிங்கம் , பிள்ளையார் , பழநியாண்டவர் , இடும்பன் சந்நிதிகள் உள்ளன 

  • ராஜதானி மண்டபத்தில் விநாயகர் , வள்ளி-தெய்வயானையுடனான மயில் மீதமர்ந்த பெரிய மூர்த்தமான ஆறுமுகர் , காசி விஸ்வநாதர் , பைரவர் முதலானோரின் சந்நிதிகள் உள்ளன 

  • துவாரபாலகர்களின் அருகில் ஒருபுறம் விநாயகரும் , மற்றொருபுறம் அதிகார நந்தியும் உள்ளனர் 

  • உள்பிரகாரத்தில் சூரியன் , அறுபத்துமூவர் , மாவடிப்பிள்ளையார் , வெண்ணெய்ப்பிரான் , அருணாச்சலேஸ்வரர் , பைரவர் , கஜலக்ஷ்மி முதலானோரின் சந்நிதிகள் உள்ளன 

  • நவக்கிரகங்கள் அனைத்தும் ( மூன்று வரிசையாக ) சிவனாரை நோக்கியவாறு மேற்கு நோக்கியிருக்கிவாறு அமைந்துள்ளன. 


அழுகுணி சித்தர்


அழுகுணி சித்தரின் ஜீவசமாதி இக்கோயிலில் உள்ளது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு யாகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடத்தப்படுகிறது. பவுர்ணமிதோறும் பாயச நைவேத்யம் படைத்து, விசேஷ பூஜை செய்து வழிபடுகின்றனர்.


இத்தலத்தில் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சௌந்தரராஜப் பெருமாள் கோயில், நாகநாதர் கோயில் , அழகியநாதர் கோயில் , அமரநந்தீசர் கோயில் , கைலாசநாதர் கோயில் , விஸ்வநாதர் கோயில் , மேலைக்காயாரோகணர் கோயில்,  மிகவும் சிறப்பு வாய்ந்த ஸ்ரீ நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில், முதலான ஆலயங்களும் இத்தலத்தில் உள்ளன.


நாளை  நாகைக்காரோணம்  சுந்தரவிடங்கர்   கோயில் பகுதி 2 தொடரும்.




இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.



தென்னாடுடைய சிவனே போற்றி  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி



ஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்






அன்பே சிவம் - சிவமே அன்பு   திருச்சிற்றம்பலம்


ஆன்மீக வாழ்வுக்கு புராதன கோவில்கள் பற்றிய தகவல்கள் அவசியம்


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்