பஞ்சபூதத் தலங்கள் - அக்னி நிறைவு பகுதி

பஞ்சபூதத் தலங்கள் - அக்னி  நிறைவு பகுதி  



பரணி தீபம்


பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள்.


இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.


பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுகதீபம் ஏற்றப்படுகிறது. பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சன்னதியில் வைக்கின்றனர்.


மகாதீபம்


மகா தீபம் கார்த்திகை தீப திருவிழா நாளின் மாலையில் அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது. இம்மலை 2,668 அடி உயரமானதாகும்.


மாலை நேரத்தில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சிதருகின்ற அர்த்தநாரீசுவரர் உற்வச கோலம் தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.


இந்த மகாதீபத்தினை பக்தர்கள் மலையின் மீது ஏறிப் பார்க்கின்றனர்.


பாடல் பெற்ற தலம்


திருமுறைப் பாடல் பெற்ற 275 திருத்தலங்கள் (சிவன் கோயில்கள்) திருமுறைத்தலங்கள் எனப் போற்றப்படுகின்றன. இவற்றில் 22 திருத்தலங்கள் நடுநாட்டில் (தமிழ்நாட்டின் ஒரு பகுதி) அமைந்துள்ளன. இந்த 22 தலங்களில் மிகவும் சிறப்புடையது திருவண்ணாமலை ஆகும்.



நால்வர்


திருஞான சம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் முதலானோர் அண்ணாமலையாரை வந்து தரிசித்து பதிகங்கள் பாடியுள்ளார்கள். மாணிக்கவாசகர் திருவண்ணாமலைக்கு வந்து பலகாலம் தங்கியிருந்து (வைணவத்தில் மார்கழி மாதத்திற்கு திருப்பாவை இருப்பது போல) சைவத்திற்கு மார்கழியில் "திருவெம்பாவை" (20) பாடல்களையும், திருவம்மானை பதிகங்களையும் இயற்றி உள்ளார். கிரிவலப்பாதையில் அடியண்ணாமலை என்னும் இடத்தில் மாணிக்கவாசகருக்கு ஒரு கோயில் இருப்பதை இன்றும் காணலாம்.


அருணகிரி நாதர்


அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் பிறந்தவர். இங்குள்ள இறைவன் முருகன் மீது பாடல்களைப் பாடியுள்ளார். அவர் கோபுரத்தில் கிளியாக மாறிப் பாடியமையால் அக்கோபுரத்தினை கிளிக்கோபுரம் என்று அழைக்கின்றார்கள்.


இத்தலத்தில் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. சைவ எல்லப்ப நாவலர் எழுதிய அருணாசல புராணம், அருணைக் கலம்பகம்குருநமச்சிவாயர் எழுதிய அண்ணாமலை வெண்பா.


ஞானிகளும் துறவிகளும்


இத்தலம் சித்தர்களின் சரணாலயமாகவும் விளங்குகிறது. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான இடைக்காட்டுச் சித்தர் இத்தலத்திற்கு உரியவராக விளங்குகிறார்.


அண்ணாமலை சுவாமிகள்,அப்பைய தீட்சிதர்,அம்மணி அம்மாள், அருணகிரிநாதர்,அழகானந்த அடிகள்,ஆதி சிவ பிரகாச சாமிகள்,இசக்கி சாமியார்,இடைக்காட்டுச் சித்தர், இரமண மகரிசி,இறை சுவாமிகள்,ஈசான்ய ஞானதேசிகர்,கண்ணாடி சாமியார்,காவ்யகண்ட  கணபதி சாத்திரி,குகை நமச்சிவாயர்,குரு நமச்சிவாயர்,குருசாமி பண்டாரம்,சடைச் சாமிகள், சடைச்சி அம்மாள்,சற்குரு சுவாமிகள்,சேசாத்திரி சாமிகள்,சைவ எல்லாப்ப நாவலர்,சோணாசலத் தேவர்,ஞான தேசிகர், தட்சிணாமூர்த்தி சாமிகள்,தம்பிரான் சுவாமிகள்,தெய்வசிகாமணி சித்தர், பத்ராச்சல சுவாமி, பழனி சுவாமிகள், பாணி பத்தர், ராதாபாய் அம்மை, மங்கையர்கரசியார்,வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்,விசிறி சாமியார்,விருபாட்சி முனிவர்,வீரவைராக்கிய மூர்த்தி சாமிகள் ,ஶ்ரீலஶ்ரீ இராஜ யோகி மூக்குப்பொடிச் சித்தர் ஆகிய சித்தர்கள் அண்ணாமலையில் வாழ்ந்த சித்தர்களாவார்கள். இவர்களில் பலர் அண்ணாமலையிலேயே ஜீவசமாதி அடைந்துள்ளார்கள். சில சித்தர்களின் ஆசிரமம் திருவண்ணமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ளது.


தற்போதும் பல்வேறு சித்தர்கள் திருவண்ணாமலையில் வாழ்ந்து வருவதாக சைவர்கள் நம்புகிறார்கள்.


இத்திருத்தலம் வேலூரிலிருந்து 70 கி.மீ. தொலைவிலும், திண்டிவனத்திலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், கிருட்டிணகிரியிலிருந்து 100 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.


இத்திருத்தலத்தில் கிரிவலப்பாதையருகே உலங்கு வானூர்தி இறங்குதளம் ஒன்று உள்ளது. இதன் மூலம் மிக முக்கிய பிரமுகர்கள் சென்னை மற்றும் பிற இடங்களிலிருந்து வந்துச் செல்ல முடியும்.


சேவார்த்திகளின் வசதிக்காக குறைந்த வாடகையில் தங்குமிடங்களை திருக்கோயில் நிர்வாகம் ஏற்படுத்தித் தந்துள்ளது. இதைத்தவிர தனியாருக்குச் சொந்தமான விடுதிகளும் திருக்கோயிலைச்சுற்றி உள்ளன.


ஊடகங்களில்


சொ.மணியன், நா.மோகன கிருஷ்ணன் என்ற எழுத்தாளர்கள் திருவண்ணாமலை கிரிவலம் எனும் நூலை எழுதியுள்ளார்கள்.


திருவண்ணாமலையின் பெருமையும் அங்கு சுற்றி இருக்கும் முக்கிய இடங்கள் பற்றிய தொகுப்பு இதில் இடம்பெற்றுள்ளது. தங்கத் தாமரை பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது.


நாளை  நீர்   தொடரும்


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.



தென்னாடுடைய சிவனே போற்றி  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி



ஓம் சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்






அன்பே சிவம்...சிவமே அன்பு


திருச்சிற்றம்பலம்


ஆன்மீக வாழ்வுக்கு புராதன கோவில்கள் பற்றிய தகவல்கள் அவசியம்


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்