பிளாக் பேந்தர் படத்தில் நடித்த சாட்விக் போஸ்மேன் புற்றுநோயால் மரணமடைந்தார்.
2008ஆம் ஆண்டு வெளியான தி எக்ஸ்ப்ரஸ் தி எர்னீ டேவிஸ் ஸ்டோரி படத்தின் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தன் திரை வாழ்க்கையை தொடங்கியவர் சாட்விக் போஸ்மேன்.
அதன் பிறகு 2013ஆம் ஆண்டு அமெரிக்க பேஸ்பால் வீரர் ஜாக்கி ராபின்ஸன் கதாபாத்திரத்தில் அவர் நடித்த ’42’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று சாட்விக் போஸ்மேனுக்கும் ஒரு நல்ல அங்கீகாரத்தை வழங்கியது.
’42’ படத்தின் வெற்றி மார்வெல் நிறுவனத்தின் புகழ்பெற்ற பிளாக் பேந்தர் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை சாட்விக் போஸ்மேனுக்கு பெற்று தந்தது.
2017ஆம் ஆண்டு சாட்விக் போஸ்மேனை வைத்து பிளாக் பேந்தர் கதாபாத்திரத்துக்காகவே ஒரு முழு நீள படத்தை தயாரித்தது மார்வெல் நிறுவனம்.
படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் உலகம் முழுவதுமுள்ள மார்வெல் ரசிகர்களின் மனதில் ப்ளாக் பேந்தராகவே பதிந்தார் போஸ்மேன்.
இந்த சூழலில் கடந்த 2016ஆம் ஆண்டு போஸ்மேனுக்கு பெருங்குடல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக கடந்த நான்கு ஆண்டுகளாக சிகிச்சை மேற்கொண்டு வந்தார் போஸ்மேன்.
ஆனால் தனக்கு புற்றுநோய் இருப்பது குறித்து வெளி உலகத்துக்கு அவர் அறிவிக்கவில்லை. சிகிச்சையின் நடுவே திரைப்படங்களிலும் நடித்து வந்துள்ளார்.
இந்நிலையில் புற்றுநோய் தீவிரமடைந்ததையடுத்து நேற்று சாட்விக் போஸ்மேன் உயிரிழந்தார். சாட்விக் போஸ்மேனின் மறைவுக்கு உலகம் முழுவதுமுள்ள ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.