ஓணம் பண்டிகை 31.08.2020


வரலாறு


ஆவணி மாதம், திருவோணம் நட்சத்திரதில் கொண்டாடப்படுவது ஓணம் பண்டிகையாகும். சங்ககால ஏடுகளில் விஷ்ணு பிறந்தநாளாகவும்  வாமனர்அவதரித்ததும் அன்றுதான் எனவும் குறிப்புகள் உள்ளன. பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சியில் பாண்டிய மக்கள் பத்து நாட்களாக எவ்வாறு கொண்டாடினார்கள் என மாங்குடி மருதனார் விவரிக்கிறார்.


கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம்  மாதத்தில் ஓணம் விழா கொண்டாடப்படுகிறது. பருவ மழைக் காலம் முடிந்ததும் எங்கும் பசுமையும் ஈரமும் நிறைந்திருக்கும் கேரளாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் கொண்டாடப்படுகிறது .


கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இதைக் கேரளாவின் "அறுவடைத் திருநாள்" என்றும் அழைப்பர். மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாகக் கொண்டாடப்படுகிறது. ஓணம் ஓராயிரம் ஆண்டுகளாகக் கேரளாவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கியமான பண்டிகையென (கி.பி 861 தேதியிட்டுக் கிடைத்த தாமிரத்தகட்டில்) ஓணம் பண்டிகைபற்றிப் பொறிக்கப்பட்டுள்ளது.


ஓணம் திருநாள் கொண்டாடப்படும் 10 நாட்களும் மக்கள் அதிகாலையிலே எழுந்து குளித்து வழிபாட்டில் ஈடுபடுவர்.



கசவு என்று சொல்லக்கூடிய சுத்தமான வெண்ணிற ஆடை உடுத்துவர். வீட்டுப் பெண்கள் வீட்டின் முன்பு 10 நாட்களும் தொடர்ந்து பூக்களினாலான கோலங்கள் இட்டு ஆடிப்பாடி மகிழ்வர். நடைபெறும் திருவிழாவில், ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனி பெயர் கொடுத்துக் கொண்டாடுகிறார்கள்.


"அத்தம் (ஹஸ்தம்) தொடங்கி பத்து நாள்வரை' என்பது சொல்வழக்கு. ஆவணி மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் விழா, சித்திரை, சுவாதி, விசாகம், அனுசம், கேட்டை, மூலம், பூராடம், உத்ராடம், திருவோணம் என பத்து நட்சத்திர நாளிலும் கொண்டாடப்படுகிறது.


கடைசி நாளான திருவோணத்தன்று தன் மக்களைத் தேடி வரும் மகாபலி மன்னனை வரவேற்க கேரள மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் "அத்தப் பூக்கோலம்' போட்டு, புத்தாடைகள் அணிந்து தீபாவளி போன்றே பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுகின்றனர்.

மகாபலி மன்னனும் வாமனனும் ஒரு முறை சிவாலயத்துள் எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரியைத் தூண்டிப்பிரகாசமாக எரிய உபகாரம் செய்தது ஒரு எலி. எனவே அவ்வெலிக்கு மூன்று லோகத்தையும் ஆட்சி செய்யும் அதிகாரத்தை வழங்கினார் சிவபெருமான்.


அந்த எலியானது மறு பிறப்பில் மகாபலி என்ற என்ற பெயருடன் மன்னாக பிறந்து சக்ரவர்த்தியாகி மூவுலகையும் சிறப்பாக ஆட்சி புரிந்தான். மகாபலி மன்னனின் ஆட்சியில் மக்கள் எந்த துன்பமும் இன்றி மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.


அசுரகுலத்தின் அசுரவேக வளர்ச்சியைக் கண்ட தேவர்கள் மகாபலி மன்னனுடன் போரிட்டனர். போரில் அசுர குலம் ஜெயிக்கவே தேவர்குலம் பயந்து திருமாலிடம் முறையிட்டனர்.


திருமாலை மகனாக அடைய வேண்டி காசிப முனிவரின் மனைவியான திதி என்பவள் வரம் கேட்க, அதன்படியே அவர்களுடைய மகனாக வாமன அவதாரம் எடுத்தார் திருமால்.




அசுரனாக இருந்தாலும் தான தர்மங்களிலும், யாகங்கள் நடத்துவதிலும் மகாபலி மன்னன் சிறந்தவனாக விளங்கினான். அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த வாமனன் மகாபலியின் அரண்மனைக்குச் சென்று தான் தவம் செய்வதற்காக மூன்றடி மண் கேட்டார்.


வந்திருப்பது திருமால் என்பதை அறிந்த அசுரகுருவான சுக்கிராச்சாரியார் தானம் தர ஒப்புக்கொள்ள வேண்டாமென மகாபலியை தடுத்தார். இறைவனே தம்மிடம் கையேந்தி நிற்பதை அறிந்த மகாபலி மன்னன் குரு சொன்னதை கேளாமல் மூன்றடி மண் தானம் தர ஒப்புக் கொண்டார்.


உடனே திரிவிக்கிரம அவதாரம் எடுத்த திருமால் அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் எனும் திருவோணத் திருநாளாகவும், புத்தாண்டாகவும் கொண்டாடுகின்றனர்


அப்படி தன் மக்களை காண மகாபலி சக்ரவர்த்தி காண வரும் நாளே ஓணத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. தங்களை காண வரும் மன்னனை வரவேற்கவும், தாங்கள் மகிழ்ச்சியாகஇருப்பதை காட்டவே மலையாள மக்கள் வாசலில் பூக்களால் கோலமிட்டு அதில் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.


ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. குறைந்த பட்சம் 64 வகையான உணவு வகை இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும். இவ்வுணவினைஓண சத்ய என அழைப்பர்



ஓண சத்ய எனப்படும் ஓணவிருந்தில் பரிமாறப்படும் பலகார வகைகளை கேட்டாலே வயிறு நிறைந்து விடும்.


கேரளத்தின் பாரம்பரிய உணவு வகைகளான அவியல், தோரன்,காலன், ஓலன், பச்சடி, கிச்சடி, இஞ்சிப்புளி, மாங்காய், எலிசேரி, கூட்டுக்கரி ஆகியவற்றை தலைவாழை இலைபோட்டு பரிமாறப்படும்.


பின்னர் பூவன்பழம், சர்க்கரை, உப்பேரி, காவற்றல், விளம்பி, சாதத்தில் பருப்போடு நெய் சேர்த்து பப்படம் வைத்து உண்ணுவார்கள். பின்னர் சாம்பார் சேர்த்து உண்டபின் பிரதமன் எனப்படும் பாயசாத்தை ஒரு பிடி பிடிப்பார்கள். பின் புளுசேரி கூட்டி, இன்னொரு சுவை, இறுதியாக மோர் கூட்டான் சேர்த்து உண்டு எழுந்தால் வயிறு நிறைந்துவிடும்.


புதுமணத் தம்பதிகள் இந்த நாளை தலை தீபாவளி போன்று தலை ஓணம் என்று மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.


கேரளம் மட்டுமின்றி, மலையாள மொழி பேசும் மக்கள் வாழும் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற அண்டை மாநிலங்களிலும் ஓணம் கொண்டாடப்படுகிறது.


மலையாள மக்களின் பாரம்பரிய திருவிழாவான ஓணம் அறுவடைத் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் இது கொண்டாடப்படுவது சிறப்பம்சமாகும்.



ஓணம் பண்டிகை   வாழ்த்துக்கள்

தொகுப்பு மோகனா  செல்வராஜ்