பஞ்சபூதத் தலங்கள் நீர்த்தலம் திருவானைக்கோவில்
திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம் ஒரு மிகப்பெரிய கோவில். சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில் நீண்ட உயரமான மதில்களும் நான்கு திசைகளிலும் கோபுரங்களும் ஐந்து பிரகாரங்களும் உடையது.
அம்மன் அகிலாண்டேஸ்வரியின் சந்நிதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது. தனி சந்நிதியில் கிழக்கு நோக்கியவாறு அகிலாண்டேஸ்வரி என்னும் அகிலம் ஆண்ட நாயகி காட்சி தருகிறாள்.
மூலவர் ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார்.
மூலவர்: ஜம்புகேஸ்வரர், திருவானைக்கா உடையார், திருவானைக்கா உடைய நாயனார், மகாதேவபட்டர்
உற்சவர்: சந்திரசேகரர், சோமாஸ்கந்தர்
தாயார்: அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம்: வெண்நாவல்
தீர்த்தம்: நவ தீர்த்தங்கள், காவிரி தீர்த்தம், இந்திர தீர்த்தம், சந்திர தீர்த்தம்
ஆகமம்: சைவாகமம்
பாடல் வகை: தேவாரம்
பாடியவர்கள்: திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர், தாயுமானவர்
கட்டடக்கலை வடிவமைப்பு: தமிழர் கட்டிடக்கலை வரலாறு
அமைத்தவர்: சோழன் செங்கணான்
அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம்
திருவானைக்கா அன்னை அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம். அகிலாண்டேஸ்வரி அம்மையின் காதுகளில் இருக்கும் காதணிகள் பெரிதாக பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாக பளிச்சென்று தெரியும். இந்தக் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பார்கள்.
அம்பாள் முன்னொரு காலத்தில் மிக உக்கிரமான உருவத்துடன் கொடூரமாக இருந்ததாகவும் பக்தர்கள் வழிபாடு செய்ய மிகவும் அச்சமுற்றதாகவும் இருக்க ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர ரூபமான இக்காதணிகளைப் பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்தார் என்று தல வரலாறு கூறுகிறது.
அன்னையின் உக்ரத்தை தணிப்பதற்காக முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
51 சக்தி பீடங்களில் தண்டநாதபீடம் எனும் வாராஹி பீடமாக இந்த சந்நதி விளங்குகிறது. காஞ்சிப் பெரியவர் அகிலாண்டேஸ்வரிக்கு ஆதிசங்கர பகவத்பாதாள் உருவாக்கி பிரதிஷ்டை செய்த சிவ சக்ரம், ஸ்ரீசக்ரம் போன்ற இரண்டு தாடங்கங்களையும் புதுப்பித்து அம்பிகைக்கு அணிவித்து மகிழ்ந்தார்.
அதிகாலையில் கோபூஜையும், உச்சிக் காலத்தில் சுவாமிக்கு தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது.
உச்சிக்கால பூஜையின் போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேஸ்வரி போல பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்ல சுவாமி சந்நிதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
அம்பிகை வழிப்பட்ட லிங்கம்:
அழகிய காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்தார். அம்பிகையின் திருக்கரங்களிலிருந்த நீர் லிங்கமாக மாறியது.
அம்பிகை அந்த லிங்கத்தை வழிபட்டு ஆனந்தம் அடைந்தார். நீரால் செய்யப்பட்டதால், லிங்கம் ஜம்புகேஸ்வரர் என வழங்கப்படுகிறது.
குபேர லிங்கம்
மற்றொரு சந்நிதியில் குபேர லிங்கம் உள்ளது. மிகப்பெரிய வடிவாகவும், பலமுக ருத்திராட்சம் தாங்கியும் உள்ளது.
இந்த குபேர லிங்கத்தை குபேரன் வழிபட்டதால் தான் சிவன் அருள் பெற்று செல்வந்தன் ஆனார் என்ற வரலாறு எல்லோருக்கும் தெரிந்ததே. இப்போது மக்கள் அதிகம் வழிபாடு செய்யும் இடங்களில் ஒன்றாக குபேர லிங்க சன்னதி ஆகிப்போனது.
நாளை நீர்த்தலம் பகுதி 3 தொடரும்
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
ஓம் சிவாய நம ஓம் சிவ சிவ ஓம்
அன்பே சிவம்...சிவமே அன்பு
திருச்சிற்றம்பலம்
ஆன்மீக வாழ்வுக்கு புராதன கோவில்கள் பற்றிய தகவல்கள் அவசியம்
நன்றி.
பக்தியுடன் மோகனா செல்வராஜ்