ஜெயலலிதா குறித்த திரைப்படம்-தடை கோரி வழக்கு

ஜெயலலிதா குறித்த திரைப்படம், வெப் தொடர்களுக்கு தடை விதிக்குமாறு தீபா எழுத்துப்பூர்வ வாதம்மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருமணம், குடும்பம் குறித்த அவதூறு மற்றும் சர்ச்சைகளுடன் திரைப்படம், வெப் தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என ஜெயலலிதாவின் நேரடி வாரிசான தீபா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் "தலைவி" என்ற பெயரில் இயக்குனர் ஏ.எல்.விஜய், இந்தியில் "ஜெயா" என்ற பெயரில் ஹைதரபாத்தை சேர்ந்த விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் திரைப்படமாக எடுத்து வருகின்றனர்


இதேபோல, ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் "குயின்" என்ற "வெப் சீரியல்" ஒன்றை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் எடுத்து வருகிறார்.


இந்நிலையில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து திரைப்படமும், வெப் தொடர்களும் தனது அனுமதி இல்லாமல் எடுக்க தடை விதிக்க வேண்டும் என தீபா, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.


இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்றத்தால் ஜெயலலிதாவின் நேரடி வாரிசு என அறிவக்கப்பட்ட தீபா தரப்பில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது.


அதில், அனிதா சிவக்குமாரன் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் "தலைவி" திரைப்படமும், "குயின்" வெப் தொடர்களும் எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறுவது தவறு, பொதுத் தகவலின் அடிப்படையில் திரைப்படங்களை எடுத்து வருகின்றனர்.


அதில், ஜெயலலிதாவின் திருமணம் குறித்த சர்ச்சைகளும், அவரது சகோதரருக்கு போதை பழக்கம் இருப்பதாகவும் வெப் தொடர்களில் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது அவரின் புகழுக்கு வேண்டுமென்றே களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாகும்.


பொதுப்பணியில் அர்பணித்துக் கொண்டவரின் திருமணம், குடும்பம், வாரிசுகள், படிப்பு குறித்து வெளிப்படுத்துவது தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவும் தன்னை பற்றிய விவரங்களை அதிகமாக வெளியிட விரும்பாதவர்.


மிகவும் அறியப்பட்ட சந்தனக்கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை மையமாக வைத்து படமாக எடுக்க அவரது மனைவி முத்துலெட்சுமியின் அனுமதி பெற வேண்டும் என உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது.


அதனால் ஜெயலலிதாவின் புகழுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் திரைப்படமும், வெப் தொடரும் எடுக்கவும், வெளியிடவும் தடை விதிக்க வேண்டும் என எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்தார்.


இதை ஏற்ற நீதிபதிகள், அனைத்து தரப்பு வாதத்திற்காகவும் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 1 ம் தேதி நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.