கண்ணப்ப நாயனார் நேற்றைய தொடர்ச்சி


கண்ணப்ப நாயனார் என்பவர் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார்.


திண்ணனார் வேட்டைத் தொழில் தாழ்த்தியமையால் காட்டிற் பெருகிய கொடிய மிருகங்களை அழித்தற் பொருட்டு "கன்னி வேட்டை"க்குச் செல்ல ஆயத்தமானார்.   


நேற்றைய தொடர்ச்சி


ஆற்றில் தெளிந்த தீர்த்த நீர் அவர் சிந்தை தெளியச் செய்தது. குடுமித்தேவரிடம் பெருகும் அன்பின் சுகமே தனக்கேற்பட்ட 'புதிரான' சுக உணர்வு என்ற விளக்கம் ஏற்படலாயிற்று.


மலைச்சாரலை அடைந்த போது உச்சிக்காலமாயிருந்தது. அவ்வேளையில் தேவர்கள் வந்து காளத்திநாதரை வழிபடுவர். அவ்வாறு வழிபடும்போது தேவதுந்துபி எழுதும். அவ்வாத்திய ஓசை திண்ணனாருக்குக் கேட்டது. "இது என்ன இசை" என்று கேட்டார். நாணனுக்கோ அது மலைப்பெருந்தேன் வண்டின் இரைச்சலாகவே தோன்றியது.


திண்ணனாரது முன்னைத் தவத்தின்பயன் முன்னி எழ முடிவிலா அன்பு பெருகலாயிற்று. அவ்வன்பும் நாணனும் முன்பு செல்லத் தான் மலை ஏறிச் சென்றார். தத்துவப் படிகளைத் தாண்டி சிவதத்துவத்தைச் சாரும் சிவஞானியாரைப்போலச் சென்றுகொண்டுருந்தார்.


இவ்வண்ணம் சென்றுகொண்டிருந்த அன்பாளர் காண்பதற்கு முன்னமே காளத்திநாதரின் அருள் திருநோக்கம் திண்ணனார் மேற் பதிந்தது. திண்ணனார் முன்னைச் சார்பு முற்றாய் நீங்கியது. அவர் ஒப்பற்ற அன்புருவானார். அன்புருவான திண்ணனார் மலைக்கொழுந்தாயுள்ள தேவரைக் கண்டார்.


அன்பின் வேகத்தால் விரைந்து ஓடிச் சென்று தழுவினார். மோந்தார், ஐயர் அகப்பட்டுக்கொண்டார் என ஆனந்தப்பட்டார். "கரடி, சிங்கம், திரியும் காட்டில் இப்படித் தனியாக இருப்பதோ" என்று இரங்கினார்.


இரங்கி நின்ற திண்ணனார் கண்ணில் தேவரின் உச்சியில் பச்சிலை, பூ என்பன தெரிந்தன. "நான் இது அறிவேன்; முன்னர் உன் தந்தையாரோடு வந்த ஒருநாள் பார்ப்பான் ஒருவன் குளிர் நீராட்டி" இலையும் பூவும் இட்டு உணவு படைத்து, சில சொற்களும் சொல்லி நின்றான்;


இன்றும் அவனே இச்செய்கை செய்தான்" என நாணன் கூறினான். "இதுவே திருக்காளத்தி நாயனாருக்கு இனிய செய்கை" என்று அதைக் கடைப்பிடிக்கத் திண்ணப்பர் ஆசை கொண்டார்.


நாயனார் பசியோடிருக்கின்றாரே; இவரிற்கு இறைச்சி கொண்டுவரவேண்டுமென விரும்பினார்.


ஆனால் அவரைத் தனியே விட்டுச் செல்லவும் மனம் ஏவவில்லை. சற்றுநேரம் சஞ்சலப் பட்டபின் துணிவுகொண்டு கைகூப்பித் தொழுதுவிட்டு வில்லெடுத்து விரைவுடன் இறங்கிச் சென்றார்.


பன்றி கிடைக்கும் இடத்தை அடைந்து உறுப்பரிந்து வைத்திருந்த இறைச்சியை தீயில் வதக்கி, வாயில் சுவை பார்த்து இனியனவெல்லாம் கல்லையிற் சேர்த்தார். இடையில் காடன் ஏதேதோ வினவினான். அவையெல்லாம் திண்ணனார் காதில் விழவேயில்லை. நாணன், "குடுமித் தேவரிடத்து வங்கினைப் பற்றி மீளாவல்லுடும்பென்ன நின்ற" அவர்தம் நிலையை காடனுக்கு எடுத்துக் கூறினான்.


அன்று பகற்போதில் காளத்தி நாதரை அர்ச்சித்து வழிபட சிவகோசரியார் எனும் அந்தணர் பூசைத் திரவியங்களுடன் வந்தார். சாத்திரங் கற்ற ஆசாரசீலரான அவ்வந்தணர் நித்தமும் சிவலிங்கத்திற்கு ஆகமவிதிப்படி பசும் நெய்பூசி, மணமிகு பூக்களோடு வில்வம் தூவி, தூயாடைக் கட்டி, எங்கும் மணங்கமழும் வண்ணம் வாசனை திரவியமிட்டு, நேரந் தவறாமற் பூசை செய்பவராக சிவனுக்கேத் தன்னையர்பணித்துக் கொண்டவராக திகழ்ந்தார். சிவனாரின் சிறப்புகளுள் மெய்சிலிற்க வைப்பது யாதெனில், குணங்களில் இருவேறு துருவங்களாக யிருப்பவருங் சிவனாரால் ஆட்கொள்ளப்படுவதே.


இருவரும் இனிச் செயலில்லை; நாகனாரிடம் செல்வோம் எனச் சென்றனர். திண்ணப்பார் கல்லையிற் சேர்த்த ஊனமுது ஓர் கையிலும், வாயில் பொன்முகலி ஆற்று மஞ்சன நீரும், தலையிற் பள்ளித் தாமமும் (பூக்கொத்து) ஆக நாயனார் மிக்க பசியோடிருப்பாரென இரங்கியவராய் விரைந்து வந்தார்.
வந்து குடுமித்தேவரின் குடுமியில் இருந்த பூக்களைத் தம் செருப்பணிந்த காலினால் துடைத்தார்.


வாயின் நீரினால் அன்பு உமிழ்வார் போல் அபிடேகமாடினார். தலையிலிருந்த பூங்கொத்துக்களை தேவர் குடுமியில் சூட்டினார். கல்லையிலிருந்து ஊனமுதைத் தேவரின் முன்பு வைத்து "இனிய ஊன் நாயனீரே; நானும் சுவை கண்டேன்; அமுது செய்தருளும்" என்று இவ்வாறான மொழிகள் சொல்லி அமுது செய்வித்தார்.


அந்தி மாலையானதும் இரவில் கொடிய விலங்குகள் வரும் என்று அஞ்சி வில்லுடான் நின்றார். இரவெல்லாம் கண்துயிலாது நின்ற வீரர் விடியற் சாமமானபோது "இன்று நாயனாருக்கு இனிய ஊனமுது படைக்க வேண்டுமென்ற ஆர்வம் கொண்டார்". இருள் பிரியாத வேளையிலே காட்டினுள் புகுந்தார். அவரின் முன்னே அவரைப் பிரியாது திரியும் நாயும் சென்றது.



நாளை தொடரும்


திருச்சிற்றம்பலம்


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்