அசுவினி ஒரு பார்வை

அசுவினி நட்சத்திரக்காரர்களுடைய குணநலன்கள், ஜோதிட பலன் மற்றும் பரிகாரங்கள்.ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களுக்கு எத்தனை முக்கியத்துவம் தரப்படுகிறதோ அதேபோல், இன்னும் சொல்லப்போனால் அதைவிட அதிக அளவு முக்கியத்துவம் நட்சத்திரங்களுக்குத் தரப்பட்டிருக்கின்றன. ஒருவர் பிறந்திருக்கும் நட்சத்திரத்தின் அடிப்படையில்தான் அவருடைய ஜாதகம் எழுதப்படுகிறது. 
இந்த உலகத்திலுள்ள அனைத்து உயிரினங்களையும் நட்சத்திரங்கள் தங்கள் ஒளிக் கற்றைகளால் ஆளுமை செய்கின்றன. நம்முடைய சடங்குகளும் சம்பிரதாயங்களும் நட்சத்திரங்களை ஒட்டியே கடைப்பிடிக்கப்படுகின்றன. இதிகாச, புராண, இலக்கியங்களில்கூட நட்சத்திரங்களைப் பற்றிய பல குறிப்புகளும், அந்தந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்பது குறித்த விவரங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன.


மொத்தம் 27 நட்சத்திர மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரத் தொகுதியும் ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களைக் கொண்டதாக இருக்கும். மேலும் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் நான்கு பாதங்கள் உண்டு.


ஒவ்வொரு பாதத்துக்கும் நவாம்ச அடிப்படையில் ஒரு கிரகம் என்று நான்கு பாதங்களுக்கு நான்கு கிரகங்களும், அந்த நட்சத்திரத்துக்கு உரிய அதிபதியான கிரகம், அந்த நட்சத்திரம் எந்த ராசியில் இடம்பெற்றிருக்கிறதோ அந்த ராசிக்கு உரிய கிரகம் என்று ஒரு நட்சத்திரத்தின் நான்கு பாதங்களையும் மூன்று மூன்று கிரகங்கள் ஆட்சி செய்கின்றன.


 அசுவினி நட்சத்திர பலன்கள்:

 


அசுவினி நட்சத்திர கூட்டம் குதிரை முக வடிவில் அமையும். ஆறு நக்ஷத்திரங்களை குறிக்கும் இது மேஷ ராசியில் அமையும். இந்த நக்ஷத்திரத்தை ஆளும் கிரகம் கேது. ராசிக்குரிய கிரகம் செவ்வாய்.


அசுவினி நட்சத்திரத்தின் முதல் பாதத்துத்துக்கு நவாம்சாதிபதி செவ்வாய். எனவே, ஒருவர் அசுவினி நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்திருக்கிறார் என்றால், அவர் கேது + செவ்வாய் + செவ்வாய் ஆகிய கிரகங்களின் ஆளுமைக்குள் இருப்பார். அதன்படியே அவருடைய வாழ்க்கையில் பலன்கள் ஏற்படும்.


அசுவினி நட்சத்திரம் 2-ம் பாதத்தில் ஒருவர் பிறந்திருந்தால், அவருடைய நவாம்சாதிபதி கிரகம் சுக்கிரன். எனவே, அவர் கேது + செவ்வாய் + சுக்கிரன் ஆகிய கிரகங்களின் ஆளுமைக்குள் இருப்பார்.


இதற்கேற்ப அவருடைய பலன்கள் அமையும். இந்தப் பகுதியில் அசுவினி முதல் ரேவதி வரையுள்ள 27 நட்சத்திரங்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.


அசுவினி:அசுவினி நட்சத்திரக்காரர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?


மன உறுதி மிக்கவர்கள். எந்த வேலையைத் தொடங்கினாலும் அதை முடிப்பதிலேயே கவனமாக இருப்பீர்கள். மன உறுதியும் உடல் வலிமையும் கொண்டிருப்பீர்கள். அறிவுக்கூர்மை மிக்கவர்களாக இருப்பீர்கள். எந்தக் காரணத்துக்காகவும் சுயகௌரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். எதிலும் முதலிடத்தில் இருக்க விரும்புவீர்கள்.


கண்களில் எப்போதும் ஒரு பிரகாசம் இருந்தபடி இருக்கும். எதையும் ஆராய்ந்து பார்த்தே ஏற்றுக்கொள்வீர்கள். நிறைய நண்பர்கள் இருந்தாலும், சிலருடன் மட்டுமே நெருங்கிப் பழகுவீர்கள். பிற மொழிகளிலும் தேர்ச்சி பெறுவீர்கள். உங்கள் பணிகளில் நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பீர்கள்.


பெரிய பதவிகள் தேடி வரும். பிள்ளைகளை அன்புடன் அரவணைத்து வளர்ப்பீர்கள். அவர்களின் மனதில் நல்லெண்ணங்களையும் தர்ம சிந்தனைகளையும் ஏற்படுத்துவீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். தீர்க்காயுளுடன் இருப்பீர்கள்.


செவ்வாய் சாதகமாக இருந்தால், போலீஸ், ராணுவம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குவீர்கள். ஒரு சிலர் மருத்துவத் துறையிலும் சிறந்து விளங்கக்கூடும்.


தங்களின் குழந்தைகள் மீது மிகுந்த பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆன்மிகப் பணிகளில் அதிகம் ஈடுபாடிருக்கும் ஈடுபடுவீர்கள். தீர்க்காயுள் உண்டு. அசுவினி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் எதிலும் முதலிடத்தில் இருக்கவே விரும்புவீர்கள். இனி ஒவ்வொரு பாதத்தில் பிறந்தவர்களின் பிரத்தியேக குணங்களைப் பார்ப்போம்


அசுவினி நட்சத்திரம் - 1-ம் பாதம்:நட்சத்திர அதிபதி - கேது; ராசி அதிபதி - செவ்வாய்; நட்சத்திர நவாம்ச அதிபதி - செவ்வாய். 


அசுவினி நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் உண்மையிலிருந்து தவற மாட்டீர்கள். சுய உழைப்பால் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். ஆடம்பரச் செலவுகள் செய்தாலும், நம்பி வந்தவர்களுக்கு உதவி செய்ய தயங்க மாட்டீர்கள்.


சிறு வயதில் அடிக்கடி உடல் ஆரோக்கியம் பாதிக்கும். விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதரர்களால் பிரச்னைகளைச் சந்திப்பீர்கள்.


ஆண் குழந்தைகளே அதிகம் பிறக்கும். வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்களைச் சந்திக்க நேரிட்டாலும் அடிப்படை வசதிகளுக்கு எந்தக் குறையுமிருக்காது. நட்புக்கு மிகுந்த மரியாதை கொடுப்பீர்கள். நண்பர்களுக்காக எதையும் செய்ய தயங்க மாட்டீர்கள். 


சந்திரன் தீய கிரக சேர்க்கையில் அல்லது பார்வையில் இருந்தால் இவர்களுக்கு சண்டை போடுவது மற்றும் தன்னை சுற்றி பிரச்னை உண்டாக்குவது அல்லது பிரச்சனைகளை ரசிப்பது போன்றவற்றில் ஈடுபாடு அதிகமாக இருக்கும்.அசுவினி 2-ம் பாதம்:


நட்சத்திர அதிபதி - கேது; ராசி அதிபதி - செவ்வாய்; நவாம்ச அதிபதி - சுக்கிரன்அசுவினி நட்சத்திரம் 2-ம் பாதத்தில் பிறந்த நீங்கள் கலைகளில் ஆர்வமுள்ளவர்களாக இருப்பீர்கள். பெற்றோர் நீங்கள் கேட்டதையெல்லாம் வாங்கித் தருவார்கள்.

 

மற்றவர்களைக் கவரும்படியான தோற்றத்துடன் காணப்படுவீர்கள். எந்தச் சூழ்நிலையிலும் உங்கள் கண்களில் ஒரு பிரகாசம் இருந்தபடி இருக்கும். உயர் கல்வி யோகம் உண்டு.

 

அதிக நண்பர்களைப் பெற்றிருப்பீர்கள். சிறு வயதிலேயே சொந்த வீடு, வாகன வசதிகள் அமையும். இவர்களுக்குப் பெரும்பாலும் காதல் திருமணமே நடைபெறும். பிள்ளைகளுக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். அதன்படியே அவர்களை வளர்ப்பீர்கள். தாயிடம் அதிகப் பாசம் கொண்டிருப்பீர்கள்.

 

சந்திரன் தீய கிரக சேர்க்கையில் அல்லது பார்வையில் இருந்தால் இவர்களுக்கு யோசிக்கும் திறமை நன்கு இருந்தாலும் அது அடுத்தவர்களுக்கு உபயோகமாக இருக்காது. சிலர் தீய வழிகளில் கூட தங்கள் கவனத்தை செலுத்த நேரிடும்

 


அசுவினி 3-ம் பாதம்நட்சத்திர அதிபதி - கேது; ராசி அதிபதி - செவ்வாய்; நவாம்ச அதிபதி - புதன்


அன்புக்குக் கட்டுப்படும் நீங்கள் அதிகாரத்துக்கு அடிபணிய மாட்டீர்கள். உங்களை அனைவரும் விரும்பும்படி நடந்துகொள்வீர்கள்.


நாசூக்காகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். கணிதம், வானவியல், ஜோதிடம் ஆகியவற்றில் ஆர்வமிருக்கும். பிற்காலத்தில் பலவிதமான அனுபவங்கள் மூலம் தொழில் துவங்கும் சாத்தியம் இவர்களுக்கு உண்டு.தாய் அல்லது தாய் போன்றவர்கள் மூலம் நல்ல அறிவுரைகள் கிடைப்பது மற்றும் தாயின் ஆதரவு இவர்களுக்கு அதிகம் இருக்கும்.


சந்திரன் தீய கிரக சேர்க்கையில் அல்லது பார்வையில் இருந்தால் இவர்களுக்கு மேற்கூறிய பலன்கள் முழுவதுமாக சரியாய் அமைந்து விடுவதில்லை. இதற்கு எதிர்மாறான குனங்களும் அமைவதுண்டுஅசுவினி 4-ம் பாதம்


நட்சத்திர அதிபதி - கேது; ராசி அதிபதி - செவ்வாய்; நவாம்ச அதிபதி - சந்திரன்


தாயிடம் அதிகப் பாசம் கொண்டிருக்கும் நீங்கள் எப்போதும் பரபரப்பாகவே காணப்படுவீர்கள். எப்போதும் உங்களைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்துகொண்டேயிருக்கும். நவீன ரக ஆடை, ஆபரணங்களை அணிவதில் ஆர்வம்கொண்டிருப்பீர்கள்.

 

இந்த பாதத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் இவர்கள் தங்கள் சுய அறிவை அதிகம் பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள். அதே நேரம் தங்கள் அறிவை மிகுந்த ஈடுபாட்டுடன் எதிலும் உபயோகித்து அந்த செயலில் வெற்றி காண்பவர்கள், அதே நேரம் அந்த செயலில் அவர்கள் வெற்றி பெறவில்லை என்றால் அதை நினைத்து அதிகம் வருந்துவார்கள். ஏனென்றால் இவர்களுக்கு தாயின் அன்பும் அரவணைப்பும் அதிகம் கிடைத்திருக்கும் எனவே எதிலும் தாய்மை பண்புடன் செயல்படுவார்கள்.

 

பால் தொடர்புடைய இனிப்பு வகைகளை அதிகம் விரும்பிச் சாப்பிடுவீர்கள். இயல்பிலேயே உங்களுக்குத் தெய்வ பக்தி அதிகமிருக்கும். ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். படிப்பில் ஆர்வம் அதிகமிருக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், விநாயகர், மகாவிஷ்ணுஅசுவினி நட்சத்திரத்தினர் வணங்க வேண்டிய பிறவி மருந்தீஸ்வரர் கோயில் &  வைத்தீஸ்வரன்கோவில்.அணியவேண்டிய நவரத்தினம்: பவளம்

 

தொகுப்பு  மோகனா  செல்வராஜ்