குரூப்-1 தேர்வில் தேர்ச்சி -போலீஸ் அதிகாரிக்கு துணை கலெக்டர் பதவி - ஐகோர்ட்டு உத்தரவு


குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போலீஸ் அதிகாரிக்கு துணை கலெக்டர் பதவி வழங்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு


 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) கடந்த 2012-14-ம் ஆண்டு நடத்திய குரூப்-1 தேர்வில் வெற்றிப் பெற்று தமிழக காவல்துறையில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர் பாபு பிரசாந்த்.


இந்தநிலையில், டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு அறிவிப்பை 2016-ம் ஆண்டு வெளியிட்டது. இந்த தேர்விலும் பாபு பிரசாந்த் கலந்துக் கொண்டார்.


துணை கலெக்டர் பதவிக்காக அவர் தேர்வு எழுதினார். முதல் 2 தேர்வுகளில் வெற்றிப் பெற்றுவிட்டார். 3-வது தேர்வு கடந்த 2017-ம் அக்டோபர் 15-ந்தேதி நடந்தது.


இந்த தேர்வில் தவறான பக்கத்தில் எழுதிய விடைகளை பாபு பிரசாந்த் அடித்துள்ளார். இதை கவனித்த தேர்வு கூடத்தின் கண்காணிப்பாளர், விடைகளை அடித்த பக்கங்களில் பாபு பிரசாந்தின் கையெழுத்தை கட்டாயப்படுத்தி வாங்கியுள்ளார்.


இதனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த தேர்வில் தேர்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டு, அதில் தேர்ச்சிப் பெற்ற 29 பேருக்கு பணி நியமனமும் வழங்கப்பட்டது.


இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பாபு பிரசாந்த் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். பின்னர், நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘முதலில் நடந்த 2 தேர்வுகளில் மனுதாரர் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.


எனவே, 3-வதாக அவர் எழுதிய தேர்வின் விடைத்தாளை மதிப்பிட்டு, அவர் தேர்ச்சி பெற்றிருந்தால், அவருக்கு நேர்முகத் தேர்வு நடத்த வேண்டும்.


இதில் அவர் தகுதி பெற்றால், புதிய (துணை கலெக்டர்) பதவியை ஒன்றை உருவாக்கி அவருக்கு பணி வழங்குவது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும். இந்த உத்தரவு இந்த வழக்கிற்கு மட்டும் பொருந்தும்’ என்று கூறியுள்ளார்