திருச்செந்தூர் கும்பாபிஷேகம்:

   


  

கும்பாபிஷேகம் - விழாக்கோலம் பூண்ட திருச்செந்தூர்

16 ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலமாக நடைபெற்ற  கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது..

"கந்தனுக்கு அரோகரா...முருகனுக்கு அரோகரா" - பக்தர்கள் பக்திப் பரவசம்

தமிழ் கடவுள் என்று போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர். இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா ஜுலை 7ம் தேதி நடைபெற்றது. 

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் இன்று குடமுழுக்கு விழா சிறப்பாக நடந்தது. லட்சோப லட்ச பக்தர்கள் திரண்டிருக்க யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனிதநீரால், ராஜகோபுரத்தில் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு விழா நடந்தது. குடமுழுக்கு விழா சமஸ்கிருதம் மட்டுமின்றி தமிழிலும் நடத்தப்பட்டது.

குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, கடந்த ஒரு வாரமாகவே பக்தர்கள் அங்கு குவிந்து வந்தனர். இன்று அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்த நிலையில், குடமுழுக்கு நேரத்தில் அரோகரா அரோகரா என்று பக்தர்கள் எழுப்பிய கோஷம் விண்ணதிர்ந்தது. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ராஜகோபுரத்தில் அர்ச்சகர்களுடன் பங்கேற்று குடமுழுக்கு விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்தை காண லட்சோப லட்ச   மக்கள் குவிவார்கள் என்று முன்கூட்டியே எதிர்பார்க்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் காலையிலே சிறப்பு அபிஷேகங்களும், வழிபாடுகளும் நடந்தது. திருச்செந்தூர் முருகன் கோயில் மட்டுமின்றி வல்லக்கோட்டை முருகன் கோயிலும் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் உள்ள முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

திருச்செந்தூர் கோயில் வளாகம் முழுவதும் முருகன் பாடல்களும், பன்னிரு திருமுறைகளும் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டது.

பக்தர்களின் பாதுகாப்பு கருதி 6  ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ட்ரோன்கள் மூலம் தெளிக்கப்பட்ட தண்ணீர்: 

மருத்துவ குழுக்கள், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ராஜகோபுரத்தின் மீது ஊற்றப்பட்ட புனித நீர் ட்ரோன்கள் மூலமாக கோயிலைச் சுற்றியும் இருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பக்தர்கள் அரோகரா என்ற கோஷத்தையும், வெற்றிவேல் வீரவேல் என்ற கோஷத்தையும் எழுப்பினர். 

தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்டதற்கு பலரும் பலத்த வரவேற்பு அளித்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராஜகோபுரம் உள்பட கோயிலின் கோபுரங்கள் அனைத்தும் பழமை மாறாமல்  புனரமைக்கப்பட்டு இருந்தது. வண்ண விளக்குளாலும், பழங்கள் மலர்கள் கொண்ட தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 

பக்தர்கள் கூட்டம் முருகனை தரிசிக்க தொடர்ச்சியாக இருக்கும் என்பதால் முருகனுக்கு தீபாராதனையும், சிறப்பு வழிபாடுகளும் தொடர்ந்து நடைபெற உள்ளது. பக்தர்கள் திருச்செந்தூர் முருகனை தரிசிக்க சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு அரசால் இயக்கப்பட்டு வருகிறது. சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.