மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகள் மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைப்புகளுடன் இணைந்து மத்திய அரசின் இளைஞர் நல அமைச்சகம் தொடங்கிய சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவின் உச்சகட்ட நிகழ்வாகக் கருதப்படும் எனது மண், எனது தேசம் என்ற மாபெரும் இயக்கம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கியுள்ளது. இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக 75 மரக்கன்றுகள் நடுதல், ஐந்து உறுதிமொழிகள் ஏற்றல், சுதந்திரப் போராட்ட வீரர்கள், சேவையில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை கௌரவித்தல், தேசியக்கொடி ஏற்றுதல், தேசிய கீதம் பாடுதல் போன்ற பன்முக நடவடிக்கைகள் நகர்ப்புற மற்றும் கிராம பஞ்சாயத்து நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கிராம ஊராட்சி அளவிலான நிகழ்வுகள் 2023, ஆகஸ்ட் 15 வரை தொடரும்.
இந்த இயக்கத்தின் தொடர்ச்சியாக, அனைத்து வட்டாரங்களிலிருந்தும் மண் சேகரிக்கப்பட்டு தேசிய தலைநகருக்குக் கொண்டு செல்லப்படும். நிறைவு நிகழ்வு ஆகஸ்ட் 27 முதல் 30 வரை புதுதில்லியில் உள்ள கடமைப் பாதையில் நடைபெறும். நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சேகரிக்கப்பட்ட மண், அம்ரித் வாடிகா (அமிர்தத் தோட்டம்) என்ற தனித்துவமான தோட்டத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படும்.
சென்னையில் உள்ள நேரு யுவ கேந்திரா அமைப்பு எனது மண், எனது தேசம் என்ற நிகழ்வை அடையாறு அரசு இளைஞர் விடுதியில் நடத்தியது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நேரு யுவ கேந்திரா அமைப்பின் மாநில இயக்குநர் திரு கே. குன்ஹமீத் தலைமை விருந்தினராகக் காலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் திரு இ.பி.ராவ், ஓய்வுபெற்ற குரூப் கேப்டன் திரு ஏ.ஆர்.ஜெயக்குமார், நாட்டு நலப்பணித் திட்ட மண்டல இயக்குநர் திரு சாயீராம், நேரு யுவ கேந்திரா அமைப்பின் துணை இயக்குநர் திரு சம்பத்குமார், வார்டு உறுப்பினர் திருமதி சுபாஷினி துரை ஆகியோரும் உரையாற்றினர்.
இளைஞர் விடுதிகளின் வளாகங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. சேவையில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரிகள் சால்வை அணிவித்து கெளரவிக்கப்பட்டனர்.
திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டப் பிரிவு சார்பில் எனது மண், எனது தேசம் இயக்கத்தின் ஒரு பகுதியாக உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் புதுக்கோட்டையில், புனித அடைக்கல அன்னை இளையோர் நற்பணி மன்றத்துடன் இணைந்து தெற்குச் செட்டியப்பட்டியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை என்.ஒய்.கே.எஸ். நடத்தியது. ஐந்து உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன. புதுக்கோட்டையில் உள்ள படைவீரர்கள் நலவாரியத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
🌏...உண்மை செய்திகள்...🌏