பிளஸ் 2 தேர்வில், 490 மதிப்பெண்கள் பெற்ற, நாமக்கல், பரமத்தி சாலை இ.பி., காலனியில் வசிக்கும், டேங்கர் லாரி டிரைவர் நடராஜன் மகள் கனிகாவிடமும், பிரதமர் மோடி உரையாடினார்.
பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று, வானொலியில், 'மன் கீ பாத்' எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு உரையாற்றி வருகிறார். நேற்று தமிழக மாணவி கனிகாவிடமும், பிரதமர் மோடி உரையாடினார்.
இது குறித்து மாணவி கனிகா, நாமக்கல்லில் கூறியதாவது: பிரதமர் மோடியின், 'மன் கீ பாத்' நிகழ்ச்சி குறித்து, அவரது அலுவலகத்தை நாங்கள் தொடர்பு கொள்ளவில்லை.
கடந்த, 24 இரவு, 7:30 மணிக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து, எங்கள் வீட்டு மொபைல் போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட அதிகாரிகள், சிறிது நேரத்தில் பிரதமர் மோடி உங்களிடம் பேசுவார் என, தெரிவித்தனர்.
சிறிது நேரத்தில் பேசிய பிரதமர் மோடி, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்தார். பிரதமரிடம் பேசியது மிகுந்த மகிழ்ச்சியாகவும், ஊக்கம் அளிக்கும் வகையிலும் இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.