சிறுவன் உயிரிழப்பு 3 பேர் கைது

 


    சென்னை அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது


சென்னை அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுஉள்ளனர். நீச்சல் பயிற்சியாளர்கள் செந்தில்குமார், சுமன், உயிர் பாதுகாப்பு ஊழியர் பிரேம்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த குப்தா என்பவரின் மகன் தேஜஸ் பெரியமேடு பகுதியில் உள்ள மைலேடிஸ் நீச்சல் குளத்தில் கடந்த 10 நாட்களாக நீச்சல் பயிற்சி பெற்றுவந்தார். சம்பவத்தன்று அவர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது தீடீரென நீரில் மூழ்கினார்.

அவரை மீட்டு உடனிருந்தவர்கள் உதவி அளித்தனர்.

ஆனால் சிறுவன் மயக்க நிலையிலேயே இருந்ததால் உடனடியாக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதை உறுதி செய்தனர்.*


இரண்டு பயிற்சியாளர்கள் உடனிருந்தும்* சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது

நீச்சல் பயிற்சியாளர்கள் உடன் இருந்தும் பயிற்சியின் போது 7 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்,இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

 பயிற்சியாளர்களின் கவனக்குறைவு காரணமாகவே தனது மகன் உயிரிழந்துள்ளார் என சிறுவனின் பெற்றோர் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீச்சல் பயிற்சியாளர்கள் செந்தில்குமார், சுமன், உயிர் பாதுகாப்பு ஊழியர் பிரேம்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


செய்தியாளர் மு.ராமச்சந்திரன்