தைப்பூசம் தொட்டதெல்லாம் துலங்கும் முருகனை வணங்குவோம்

 


    தொட்டதெல்லாம் துலங்கும் தைப்பூசம்... முருகனை வழிபட்டு... சுபிட்சம் பெறுவோம்...!!


முருகனுக்கு உகந்த தைப்பூச நாளின் சிறப்புகள்...!!


முருகப்பெருமானின் அருளை பெற்றுத்தரும் விரதங்களில் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது. சக்தியின் வெளிப்பாடும், தெய்வாம்சமும் பொருந்திய காலம்தான் தை மாதம்.


பூச நட்சத்திர நாள் காவடி பிரியன் கந்தனுக்கு மிகவும் விசேஷமான நாள். இந்நாளில்தான் முருகப்பெருமான் வள்ளியை மணமுடித்தார். தாரகாசுரனை வதம் செய்ய தாய் பார்வதியிடம் வேல் வாங்கிய நாள்.


அந்த வகையில் நாளை (18.01.2022) அனைத்து முருகன் தலங்களிலும் விசேஷ பூஜைகள் மற்றும் ஆராதனைகளுடன் தைப்பூச திருநாள் கோலாகலமாக கொண்டாடப்

படுகின்றது.முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்றாலும் அந்நாளில் முருகப்பெருமானுடன் சிவபெருமானையும் வழிபடுதல் வேண்டும்.


மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபெருமான் தனியாக நடனம் புரிந்தார். சிவபெருமான் தனது அம்பிகை உமாதேவியுடன் இருந்து ஞான சபையான சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த புண்ணியத் திருநாள் தைப்பூசம். ஆகவே இந்த தைப்பூச திருநாள் சிவசக்திக்கு உகந்த நாளாகும்.


வேலுக்கு பூஜை... வேலவனுக்கு ஆராதனை!


தைப்பூசத் திருநாளில், வேல் பூஜை செய்வதும் வேலுக்கு அபிஷேகங்கள் செய்வதும் வேலுக்கு செவ்வரளி கொண்டு அர்ச்சித்து வழிபாடுகள் மேற்கொள்வதும் உன்னதமான பலன்களைக் கொடுக்கவல்லது.


இந்த நாளில், முருகப்பெருமானுக்கு விரதம் மேற்

கொள்வதும் இல்லத்தில் முருகப்பெருமானுக்கு பூஜைகள் மேற்கொள்வதும் அருகில் உள்ள முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் தலங்களுக்கு சென்று தரிசிப்பதும் தோஷங்களை

யெல்லாம் போக்கக்கூடியது. குறிப்பாக, செவ்வாய் தோஷத்தைப் போக்கி அருளும். சந்தோஷத்தைப் பெருக்கித் தரும்.


தைப்பூச நன்னாளில், முருகக்கடவுளுக்கு கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதும், அருணகிரிநாதர் அருளிய திருப்புகழை பாராயணம் செய்வதும் எதிர்ப்புகளைத் தவிடுபொடியாக்கித் தரும். எதிரிகளை பலமிழக்க செய்யும். இல்லத்தில் சுபிட்சத்தைத் தந்தருளுவார் வெற்றிவடிவேலவன்.


தைப்பூச நாளை காணிக்கை செலுத்தும் நாளாக முருக பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். பழங்கள், நெல், காய்கறிகள் எது விளைந்தாலும் அதை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதற்காகவே காவடிகளில் அவற்றை வைத்து எடுத்து செல்வார்கள். 


தைப்பூசம் :


இரணியவர்மன் எனும் மன்னன் சிதம்பரத்துக்கு வந்து நிறைய திருப்பணிகள் செய்தான்.


அவன் நடராஜ பெருமானை ஒரு தைப்பூச நாளில்தான் நேருக்கு நேர் சந்திக்கும் பேற்றைப் பெற்றான்.


தைப்பூசம் தினத்தன்று குழந்தைகளுக்கு காது குத்துவது, கல்வி கற்க தொடங்குதல், கிரகப்பிரவேசம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.


தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் என்றொரு பழமொழி உண்டு.


தைப்பூச நன்னாளில் தான் உலகில் முதன் முதலில் நீரும், அதிலிருந்து உலகும், உயிரினங்களும் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.


பக்தியுடன்


மோகனா  செல்வராஜ்