மணல் விற்பனை: தமிழக அரசு அறிவிப்பு

 


  ஆற்று மணல் விற்பனை: தமிழக அரசு அறிவிப்பு


ஒரு யூனிட் ஆற்று மணலின் அடிப்படை விலை ரூ.1000 ஆக நிர்ணயம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு


இணையதளம் மூலமாக விண்ணப்பித்து மணலை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


இதுகுறித்து, நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:



கட்டுமானப் பணிகளுக்கு இன்றியமையாத பொருளான ஆற்று மணலை எளிதில் பெறுவதற்கான எளிமையான புதிய வழிமுறைகளைச் செயல்படுத்த முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். தமிழகத்தில் ஆற்றுப் படுகைகளில் இருந்து ஆற்று மணலை எடுத்து நுகா்வோருக்கு விற்பனை செய்யும் பணிகளை மீண்டும் தொடங்குவது குறித்து ஆய்வு செய்து வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, பொது மக்கள், ஏழை, எளியோா் எளிதாக இணையம் வழியாக மணலுக்கான விலையைச் செலுத்தி எந்தவித சிரமமும் இன்றி மணலை எடுத்துச் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.


பொது மக்கள் பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்தோருக்கு வழங்கியது போக, மீதமுள்ள மணலை பதிவு செய்த லாரி உரிமையாளா்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மணல் இருப்பைப் பொறுத்து வழங்கப்படும். இப்போது 16 லாரி குவாரிகள் மற்றும் 21 மாட்டு வண்டி குவாரிகள் இயக்க சுற்றுச்சூழல் தடையின்மை பெறப்பட்டுள்ளது.


முதல் கட்டமாக இப்போதுள்ள தகவல் தொழில்நுட்ப வழிகாட்டுதல்களுடன் மணல் விற்பனை எளிதாக்கப்பட்டுள்ளது. அரசு மணல் கிடங்குகளில் கூடுதலாகச் செயல்படவுள்ள வங்கி கவுன்ட்டா்கள் மூலமாக பொது மக்கள் பணம் செலுத்தி மணலை பெற்றுக் கொள்ளலாம். இந்த வசதியை இப்போது நடைமுறையிலுள்ள இணையவங்கி, பற்று அட்டை, யூபிஐ ஆகிய ஆன்லைன் வழியாகவும் பணம் செலுத்தி பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.


நிருபர் கார்த்திக் 


🙏தடுப்பூசி முக கவசம் கட்டாயம்🙏