சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் பயிலும் 5,500 மாணவிகள் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் சுகாதாரத் தூதுவர்களாக நியமிக்கப்படுவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
"ராணி மேரி கல்லூரி மாணவிகளுக்கு நடைபெறும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் கலந்து கொண்டதில் , இங்கு மாணவிகளின் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளின் மூலம் கரோனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கு பெற்றதிலும் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். மாணவிகளின் ஆர்வத்தைப் பாராட்டும் வகையிலும், அவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் இங்கு பயிலும் 5,500 மாணவிகள் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் சுகாதாரத் தூதுவர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
கல்லூரி மாணவிகளுக்கு சுகாதாரத்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும். இந்த மாணவிகள் தங்கள் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் உறவினர்களுக்கு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும், கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.
மேலும் இந்த கல்லூரியில் பயிலும் 5,500 மாணவிகளில் 3800 மாணவிகள் இரண்டு தவணை தடுப்பூசியும், 800 மாணவிகள் முதல் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். 900 மாணவிகள் மட்டுமே தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அவர்களும் இந்தத் தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டு ஆர்வமாகத் தடுப்பூசி செலுத்திக் கொள்வார்கள். 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய கல்லூரி என்கிற நிலையை ராணி மேரி கல்லூரி சில நாட்களில் அடைந்துவிடும். இதற்காக கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்
*தமிழகத்தில் முதல் ஒமைக்ரான் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு*
நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக வந்த நபருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த 7 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த நபர் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தியுள்ளதால் லேசான அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என்றார்.
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
உலக சுகாதார அமைப்பு மரபியல் மாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவக்கூடியது எனத் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வகை வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் அணிவதும், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்துவதுமே நிரந்தரத் தீர்வு எனத் தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும், ஆக்சிஜன் சுவாச உதவி போன்ற தீவிர பாதிப்பு இன்றி லேசான அறிகுறிகளுடன் உயிர்ப் பாதுகாப்பு உள்ளது.
மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்துவது மற்றும் 18 வயதிற்குக் கீழ் உள்ள நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசின் முடிவினைப் பொறுத்து முறையான வழிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
நிருபர் மணிவண்ணன்
🙏தடுப்பூசி முகக் கவசம் கட்டாயம்🙏