கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீடித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

 

  

      தமிழ்நாட்டில் நவம்பர் 15-ம் தேதி வரை ஊரடங்கு நீடித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார், என்னென்ன தளர்வுகள் அளிக்கலாம் என்று மருத்துவ நிபுணர் குழுவினரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.


மேலும் இந்த குழுவினர் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் தற்போது நவம்பர் 15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா குறைந்துள்ளதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-


* திரையரங்குகளில் நவம்பர் 1-ம் தேதி முதல் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது


* அனைத்து வகை கடைகள் மற்றும் உணவகங்களுக்கான இரவு 11 மணி வரை செயல்பட வேண்டும் என்ற நேரக்கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது* கூட்ட அரங்குகளில் அனைத்து வகையான கலாசார நிகழ்வுகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது


* அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம், பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் போன்ற அரசு பயிற்சி நிலையங்கள் 100% பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.


இது தவிர திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு நடைமுறையில் உள்ள தடை தொடரும் என்றும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.


* தமிழகத்தில் தனித்து இயங்கும் அனைத்து வகை மதுக்கூடங்களுக்கும்(பார்கள்) இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது


* விளையாட்டு அரங்குகளில் விளையாட்டு, பயிற்சி போட்டிகள் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது


* அனைத்து பள்ளிகளிலும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த 1-ம் தேதி முதல் அனுமதி


* அனைத்து வகையான படப்பிடிப்புகளும் கொரோனா வழிகாட்டு முறைகளை பின்பற்றி நடத்த அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது


* கேரளா தவிர பிற மாநிலங்களுக்கு 100% இருக்கையுடன் சாதாரண, குளிர்சாதன பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது.


பண்டிகைக் காலங்களில், பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும், அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் மட்டுமே பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. 


அதனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் பண்டிகை நாட்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியினை கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறும், 


மாவட்ட நிர்வாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்குச் சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.


நிருபர் பாலாஜி 


😷முக கவசம் உயிர்க் கவசம்😷