பாலியல் தொல்லை குறித்து மாணவர்கள் புகார் தெரிவிக்க குழு அமைக்க ஐகோர்ட் உத்தரவு

            பாலியல் தொல்லை குறித்து மாணவர்கள் புகார் தெரிவிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் குழு அமைத்து சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரின் கட்டுப்பாட்டில் அதனை வைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.


சேலம் மாவட்டத்திலுள்ள சிஎஸ்ஐ தேவாலய வளாகத்தில் குடியிருக்கும் மத போதகர் எஸ்.ஜெயசீலன், அந்த வளாகத்தில் இயங்கி வரும் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த 12 வயது மாணவியிடம், இயேசுநாதரின் கதைகளை கூறுவதாக கூறி அந்த மாணவியை வீட்டிற்கு அழைத்து பாலியல் சீண்டலில் (Sexual Harassment) ஈடுபட்டுள்ளார்.


 அவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது . பாலியல் பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சேலம் மகளிர் நீதிமன்றம், போதகர் ஜெயசீலனுக்கு 5 ஆண்டுகள் சிறை தாண்டனையும், 25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.


இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயசீலன் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், 12 வயது மாணவியிடம் மத போதகர் ஜெயசீலன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, தண்டனை உறுதி செய்தும், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். மேலும் இது போன்ற பாலியல் தொல்லைக்கு ஆளாகும்போது புகார் அளித்தால் தங்கள் கல்வி பாதிக்கப்படும் என மாணவிகள் அச்சம் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.


இந்நிலையில் அனைத்து பள்ளிகளிலும், சமூக நலத்துறை அதிகாரி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளர், எஸ்.பி. அந்தஸ்துக்கு குறையாத பெண் காவல் அதிகாரி, மாவட்ட கல்வி அலுவலர், உளவியல் பெண் நிபுணர், அரசு மருத்துவர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். 


மேலும் சுதந்திரமாக புகார் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகளை அமைக்க வேண்டும் என அரசுக்கு              ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.