முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சத்தை அடையார் ஆனந்த பவன், 'ஏ2பி' நிறுவனங்கள் வழங்கின.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூன் 01) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கொரோனா பேரிடர் துயர் துடைப்புக்காக, முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று, சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், கொரோனா துயர் துடைப்பு நிதியாக, அடையார் ஆனந்த பவன் மற்றும் 'ஏ2பி' உணவக நிறுவனங்களின் சார்பில், ரூ.50 லட்சம்,
மேலும் தமிழ்நாடு ஓட்டல்கள் அசோசியேஷன் சார்பில் ரூ.10 லட்சம் என, மொத்தம் ரூ.60 லட்சத்திற்கான காசோலையை அதன் நிறுவன இயக்குநர்கள் கே.டி.வெங்கடேச ராஜா, கே.டி.ஸ்ரீனிவாச ராஜா, டி.வெங்கடேச ராஜாவின் மகன் வி.விஷ்ணு ஷங்கர் ஆகியோர் வழங்கினர்.
AIMA (அம்பத்தூர் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் அசோசியேஷன்) சார்பில் ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல், அடையார் ஆனந்த பவன் மற்றும் 'ஏ2பி' உணவக நிறுவனங்களின் சார்பில், சென்னை தண்டையார்பேட்டை பொது சுகாதார மையத்தில், கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில், 60 படுக்கைகள் மற்றும் அதற்கான ஷெட் ஆகியவை ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில், 80 படுக்கைகள் மற்றும் அதற்கான ஷெட், ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஆகியவை ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு, அடையார் ஆனந்த பவன் மற்றும் 'ஏ2பி' உணவக நிறுவனங்களின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், முன்களப் பணியாளர்கள் மற்றும் கொரோனா நோயாளிகள் 500 பேருக்கு தினமும் உணவு வழங்கப்படுகிறது".
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.