அறிந்து கொள்வோம் தினம் ஒரு திருத்தலம்

 



   தினம் ஒரு திருத்தலம்... 9 அடி உயரம்... சக்கரமில்லா... தேரோட்டிய பெருமாள்...!!

அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில்...!!


அமைவிடம் :


மங்களாசாசனம் பாடப்பெற்ற பெருமாளின் 108 திவ்ய தேசங்களில், இந்த திருக்கோயில் 61வது திவ்ய தேசம் ஆகும்.


 கடமையிலிருந்து நழுவ நினைத்த அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்து உலகத்திற்கே 'கீதோபதேசம்" செய்த கண்ணன் வீற்றிருக்கும் தலம் சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோவில். இத்தலத்திற்கு பஞ்ச வீரத் தலம் என்ற பெயரும் உண்டு.


மாவட்டம் :

சென்னை 


அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை.


எப்படி செல்வது?


சென்னையின் மிக முக்கிய பகுதி திருவல்லிக்கேணி என்பதால் பேருந்து வசதிகள் உள்ளது. மின்சார ரயில் வசதியும் திருவல்லிக்கேணிக்கு உண்டு.


கோயில் சிறப்பு :


இத்தலத்து எம்பெருமான் மகாபாரதப் போரின்போது பார்த்தனுக்கு (அர்ஜுனன்) தேரோட்டி (சாரதி) வடிவில் காட்சி அளிக்கிறார். இத்தலத்து மூலவரின் பெயர் வேங்கட கிருஷ்ணர் என்ற போதிலும் உற்சவராகிய பார்த்தசாரதியின் பெயரிலே புகழப்பெற்றுள்ளது.


9 அடி உயர மூலவர், சாரதிக்குரிய மீசையுடனும், தன் பிரதான ஆயுதமான சுதர்சன சக்கரம் இல்லாமலும் காட்சி தருகிறார். இதுவே இத்தலத்தின் மிக முக்கிய சிறப்பாக கருதப்படுகிறது. 


குடும்ப சமேதராக பெருமாள் காட்சியளிக்கிறார்.


மகாபாரதப் போரில் பீஷ்மர் எய்த அம்புகளை அர்ஜுனனுக்காக தானே தன் மீது தாங்கியதால், திருமாலின் முகத்தில் பல்வேறு வடுக்கள் ஏற்பட்டன. 


இப்படி ஏற்பட்ட வடுக்களை இப்போதும் உற்சவர் திருமுகத்தில் காணலாம். 


காயங்களுடன் இருப்பதால், எம்பெருமானுக்கு நைவேத்தியத்தில் சற்று அதிகமாக நெய் சேர்க்கப்படுகிறது. அதோடு மிளகாய் போன்ற காரமான பொருட்களை அதில் சேர்க்கப்படுவதில்லை.


பெரும்பாலும் 4 கரங்களுடன் இருக்கும் பெருமாள் இந்த கோயிலில் கிருஷ்ணர் எனும் மானிட வடிவில் காட்சி தருவதால் இரண்டு கரங்களுடன் அருள்பாலிக்கிறார்.


கோயில் திருவிழா :


சித்திரை மாத பிரம்மோற்சவம், ஆனி மாத நரசிம்மர் பிரம்மோற்சவம், ஆடி மாதம் பௌர்ணமி மறுதினம் உற்சவரின் தங்ககவசம் கலைந்து திருமஞ்சனம் நடைபெறும், ஆவணி மாத ஸ்ரீஜெயந்தி, புரட்டாசி அனைத்து சனிக்கிழமைகளில் விசேஷம், மார்கழி பகல்பத்து, வைகுண்ட ஏகாதசி, இராப்பத்து திருவிழா, மாசி மாத தெப்ப உற்சவம் என பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.


பிரார்த்தனை : 


இங்குள்ள நரசிம்மரை வணங்கினால் கல்வி வேள்விகளில் சிறந்த ஞானம் கிடைக்கும். தவிர இத்தலத்து பெருமாளை மனமுருக வேண்டினால் கல்யாண வரம், குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவை கிடைக்கும்.


அழகாக பிறக்கவில்லையே என்ற வருத்தத்தில் இருப்பவர்கள், இந்த ஆலயத்தில் திருமாலின் இந்த கோலத்தை தரிசித்தால், அழகு என்பது அழியக்கூடியது, நிரந்தரமற்றது என்ற தத்துவத்தை உணர்வார்கள்.


நேர்த்திக்கடன் :


சுவாமிக்கு திருமஞ்சனம் செய்தும், சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியம் படைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.


பிரசாதம் :


இக்கோயிலில் 'திருக்கண்ணமுது" எனப்படும் ஒரு வகை பாயாசம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது இக்கோயிலின் மற்றொரு சிறப்பு ஆகும்.


ஓம் நமோ நாராயணாய 


பக்தியுடன்


 மோகனா செல்வராஜ்