கறிவேப்பிலை என்பது சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் ஒருவகைகறிவேப்பிலை இலையாகும்.
“கறிவேம்பு இலை” என்ற சொல் தான் பிற்காலத்தில் மருவிக் கறிவேப்பிலை என்று ஆனது.
நம்முடைய பாரம்பரியமான சமையல் முறைகளில் கறிவேப்பிலை தவறாமல் இடம்பெறும்.
இந்தக் கறிவேப்பிலை புதர்ச்செடி அல்லது குறுமரம் வகையைச் சேர்ந்தது.
தண்டு மற்றும் கிளைகளின் இடையில் கறிவேப்பிலை இலைகள் கொத்தாக வளர்கின்றன.
இந்தக் கறிவேப்பிலை பார்ப்பதற்கு சிறியத் தோற்றத்தினைக் கொண்டிருந்தாலும் இவற்றில் புதைந்துள்ள நன்மைகள் ஏராளம்.
ஆனால் இந்தக் கறிவேப்பிலையின் நன்மைகள் ஒருசிலர் (பலர் என்று கூடச் சொல்லலாம்) தெரியாமல் உண்ணாமல் அவர்கள் உண்ணும் சாப்பாட்டிலிருந்துத் தூக்கி எறிந்து விடுகிறார்கள்.
தூக்கி எறியாமல் உண்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.
தமிழ்ச் சித்த மருத்துவத்திற்கு இயற்கை நமக்கு அளித்த மாபெரும் கொடைதான் இந்தக் கருவேப்பிலை. நம்மைப் போன்ற இன்றைய தலைமுறையினர் அனைவரும் உணவின் நறுமணத்திற்காகக் கறிவேப்பிலையைப் பயன்படுத்துகின்றனர் என்ற தவறான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் நம் முன்னோர்கள் கறிவேப்பிலையின் மருத்துவக் குணத்தினை கருத்தில் கொண்டே உணவில் சேர்த்து வந்துள்ளனர்.
இப்போது நாம் நமது உண்மை செய்திகள் பிரிவில் கறி வேப்பிலை சாதம் செய்வது குறித்து கீழே காணலாம்.
கறிவேப்பிலை சாதம்
உணவு சமைக்கும் போது நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் கறிவேப்பிலையை சேர்ப்போம்.
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை அதிகளவில் நிறைந்துள்ளது.
இப்போது கறிவேப்பிலை சாதம் எப்படி எளிதாக செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:-
கறிவேப்பிலை - அரை கட்டு
சாதம் - 2 கப்
நெய் - 2 tsp
சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது)
பூண்டு பல் - 10
வரமிளகாய் - 4
உளுத்தம் பருப்பு - 1 tsp
கடலைபருப்பு - 1 tsp
சீரகம் - 1/4 tsp
கடுகு - 1/2 tsp
உப்பு - தேவைக்கேற்ப
முந்திரி - 10
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :-
கடாயில் நெய் விட்டு முந்திரி வறுத்துக்கொள்ளவும்.
அதே நெய்யில் பூண்டு, வரமிளகாய், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
இவை ஆறியதும் கொரகொரப்பாக அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
அதன்பின், கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், கடுகு, பெருங்காயதூள் சேர்த்து தாளிக்கவும்.
பின் அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், உப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின் சாதத்தை கொட்டி கிளறி, அதில் அரைத்து வைத்துள்ள பொடியை தூவி ஒரு சேர கிளறவும். பின் அதில் முந்திரி சேர்த்து இறக்கவும்.
சத்தான கறிவேப்பிலை சாதம் தயார்.
அன்புடன்
கார்த்திகா