கொல்கத்தா ரயில்வே அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து

 


மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கிழக்கு ரயில்வே அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.  

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா நகரில் ஸ்டிராண்ட் சாலையில் உள்ள பல அடுக்கு கட்டிடம் ஒன்றில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது.

 தகவலறிந்து தீயணைப்புப்படை வீரர்கள் 8 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 

அந்த கட்டிடத்தின் 13வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. அப்போது சில தீயணைப்பு வீரர்களும் காவல்துறையினரும் லிப்டில் மாடிக்கு செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

லிப்ட் சிக்கிக் கொண்டதில் 4 தீயணைப்பு வீரர்கள் 2 ரயில்வே அதிகாரிகள், ஒரு காவல் அதிகாரி உள்பட 9 பேர் உயிரிழந்தனர். 

08.03.2021 மாலை 6.10 மணியளவில் கொல்கத்தா காவல்துறையினர் முதலில் தீ விபத்து குறித்து எச்சரிக்கப்பட்டனர். 

குறைந்தது 10 தீயணைப்பு இயந்திரங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. 

நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான பணிகள் இன்னும் நடைபெற்று வருவதாக தீயணைப்பு படையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விபத்து மேற்குவங்கத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்போது லிஃப்டில் 4  வீரர்கள் சென்ற நிலையில், மின் கசிவு ஏற்பட்டதால் மின்சாரம் தாக்கிய 4 பேர் இறந்துள்ளனர். 

இது தவிர 5 பேர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 

மேலும் இந்த கட்டிடத்தில் இருந்த சிலரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது.  தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிற நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  

களத்தில் நேரில் சென்று மம்தா ஆய்வு:


தீ விபத்து நடந்த இடத்தை முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் பார்வையிட்டார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; இது மிகவும் வருத்தத்திற்குரியது.  உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என கூறினார்.

பிரதமர் மோடி இரங்கல்:


கொல்கத்தா கிழக்கு ரயில்வே அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 9 பேருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

பியூஷ் கோயெல் இரங்கல்:


தீ விபத்தில் 4 தீயணைப்பு வீரர்கள், 2 ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஒரு காவல் துறை அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் மரணத்திற்கு அவர்களது குடும்பத்தினருக்கு மத்திய ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயெல் இரங்கல் தெரிவித்தார்.